தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்க கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு..!

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தினமும் 5,000 கன அடி தண்ணீர் வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளதற்கு கர்நாடக மாநிலம், மாண்டியா விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி ஆதரவில் வெற்றிபெற்ற சுயேச்சை எம்.எல்.ஏ. புட்டண்ணா தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வரும் வெள்ளிக்கிழமை கூட்டம் நடைபெற உள்ளது. அதுவரை நாங்கள் காத்திருப்போம். அதன் முடிவை பொறுத்து எங்களது போராட்டம் வலுப்பெறும் என்று புட்டண்ணா தெரிவித்தார்.

கிருஷ்ணராஜ சாகர் அணை அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகத்தின் நிலையை புரிந்து கொள்ளாமல் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில் போராட்டத்தை தொடருவோம் எனவும் அவர்கள் எச்சரித்தனர். பெங்களூரு- மைசூர் நெடுஞ்சாலையில் போராட்டம் நடைபெற்றது.

தமிழகம் தினமும் 24,000 கன அடி தண்ணீர் திறக்க்க் கோரியும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தினமும் 5,000 கன அடி தண்ணீரை மட்டுமே திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாக கூறி துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதை நியாயப்படுத்தினார்.

நாங்கள் எங்களது நிலைமையை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் தெரிவித்துவிட்டோம். எங்களின் தொழில்நுட்பக் குழுவும் தங்கள் தரப்பு வாதத்தை எடுத்துரைத்துள்ளனர் என்றும் சிவகுமார் மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

இதனிடையே தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், கர்நாடகத்தில் உள்ள நான்கு அணைகளின் மொத்த கொள்ளளவு 114 டி.எம்.சி. ஆகும். தற்போது கர்நாடகத்திடம் 93.535 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. அதாவது 83 சதவீதம் கையிருப்பில் உள்ளது. எனவே தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதில் கர்நாடகத்துக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று கூறினார்.