திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கனிமொழி எம்பி உரை

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக துணை பொது செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்பி கலந்துகொண்டு திமுக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், “சட்டமன்ற தேர்தலில் நாம் அடைந்த தோல்வி குறித்து ஆராய வேண்டும். தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் மூன்று தொகுதிகளில் விளாத்திகுளம் கோவில்பட்டி ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். இதுவரை வெற்றி பெறாத கோவில்பட்டியில் ஒரு மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம். ஆனால் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியின் தோல்வி என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. கீதா ஜீவன் மக்களோடு மக்களாக பணி செய்தவர்.ஆனாலும் தோல்வி ஏற்பட்டுள்ளது. இனிமேல் தான் நாம் சிறப்பான பணியை செய்ய வேண்டும். யாரும் எதிர்பார்க்காத இந்த தோல்வியை கள நிலவரம் எது புரியாமல் செய்துவிட்டது என்ற பதில் பெற வேண்டும். அதனால்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்டத்திற்கு இரண்டு பேர் கொண்ட சிறப்பு குழுக்களை அமைத்து ஆராய உள்ளனர். இந்தக் குழுவிடம் உண்மை நிலவரங்களை எடுத்துச் சொல்ல வேண்டும்.
சரியான கருத்துக்களை சொல்லும்போது தான் தலைமை முடிவெடுத்து கட்டமைப்பை மாற்ற முடியும். மேலும் கூட்டணி குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் இது. நம்மை நாம் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் யாரும் இல்லாமல் திமுக அனைத்து தொகுதிகளில் வெற்றி பெற முடியும். மேலும் ஒரு சிறப்பான பணியை தொடர்ந்து வழங்குவது மூலம் திமுக யார் என்பதை அனைவருக்கும் காட்ட முடியும்.” என்று பேசினார்.
இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாநிதி, மார்க்கண்டேயன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.