திய அமைச்சர்களுடன் தமிழக அரசின் அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியாகின. இதில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், மற்ற கட்சிகளைவிட தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களைக் கைப்பற்றி அரசு அமைக்கும் வாய்ப்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, கடந்த 10-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தமிழக முதல்வராகப் பதவி ஏற்றார். அவருடன் சேர்த்து ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், வெங்கடரமணன் உள்ளிட்ட 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.தொடர்ந்து, கடந்த 16-ஆம் தேதி முதல்வர் உள்ளிட்ட இந்த 10 அமைச்சர்களுக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டன. இருப்பினும் உள்துறை, வேளாண்மை, வருவாய்த்துறை, கூட்டுறவு, மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை போன்ற முக்கியத் துறைகளுக்கு இன்னும் அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், தவெகவிற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், ஐயுஎம்எல், அதிமுகவிலிருந்து பிளவுபட்டு வந்து ஆதரவளிக்கும் 25 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளதால் அதன் பலம் 144 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது அமையவுள்ள புதிய கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் மற்றும் அதிமுக (பிளவுபட்ட அணி) எம்எல்ஏக்களும் இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்களில் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகிய இருவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதில் ஒருவருக்கு மீன்வளத்துறை ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது. தவெகவை ஆதரிக்கும் அதிமுகவை (பிளவு அணி) சேர்ந்த 25 எம்எல்ஏக்களில் சிலரும் அமைச்சராக விருப்பம் தெரிவித்துள்ளனர். அதன்படி எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உட்பட 6 பேருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவை விதிகளின்படி முதல்வர் உட்பட மொத்தம் 34 பேர் (1 முதல்வர் + 33 அமைச்சர்கள்) அமைச்சரவையில் இடம்பெற முடியும். எனவே, கூட்டணிக் கட்சிகளுக்குப் போக மீதமுள்ள இடங்கள் தவெக எம்எல்ஏக்களைக் கொண்டு நிரப்பப்படும் எனத் தெரிகிறது. அமைச்சரவை விரிவாக்கத் திட்டத்தின்படி, புதிய அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்காகத் தமிழக ஆளுநர் அர்லேகர் இன்று சென்னை வருகிறார். நாளை (மே 21) புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.






