கோவை : முருகன் கோவில்களில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் முருகப்பெருமானின் 7- வது படை வீடாக பக்தர்களால் அழைக்கப்படும் கோவை மருதமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா வருகிற 2 – ந் தேதி தொடங்குகிறது.இதை யொட்டி அன்றைய தினம் காலை 8 மணிக்கு விநாயகர் பூஜை, 10: மணிக்கு கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் ஆகிய நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் தினமும் காலை மாலை நேரங்களில் யாகசாலை பூஜை, சண்முகா அர்ச்சனை நடைபெறுகிறது. விழாவில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அடுத்த மாதம் 7-ந் தேதி நடக்கிறது அன்றைய தினம் காலையில் மூலவருக்கு சண்முகார்ச்சனை சத்ரு சம்கார வேள்வி நடைபெறுகிறது. மதியம் 3 மணிக்கு முருகப்பெருமான் அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து 3.30 மணிக்கு சூரசம்காரம் நடக்கிறது. அதன்பிறகு சூரசம்ஹாரம் செய்த முருகப்பெருமானின் கோபத்தை தணிக்கும் வகையில் சாந்த அபிஷேகம் நடக்கிறது .தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி காட்சி அளிக்கிறார். இதையடுத்து 8 -ந் தேதி காலை திருக்கல்யாணம் மண்டபத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருள்கிறார்..பின்னர் கந்த சஷ்டி விரதம் இருந்த பக்தர்கள் தங்கள் விரத்தத்தை முடித்துக் கொள்கிறார்கள். கந்த சஷ்டி விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார், துணை ஆணையர் செந்தில்குமார், அறங்காவலர்கள் மகேஷ் குமார், பிரேம்குமார், கனகராஜன், சுகன்யா, ராஜரத்தினம் ஆகியோர் செய்து வருகிறார்கள்.