கோவையில் கமல்ஹாசன் 4 நாள் பிரசாரம்.!!

கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 77 வார்டுகளுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை ஆதரித்து கட்சித் தலைவர் கமல்ஹாசன் 4 நாள் பிரசாரம் மேற்கொள்கிறார். கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். கமல்ஹாசன் ஒரு மாதம் கோவையிலேயே தங்கி இருந்து, நகரில் இருக்கக்கூடிய முக்கிய பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இருப்பினும் அந்த தேர்தலில் கமல்ஹாசன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜவை சேர்ந்த வானதி சீனிவாசனிடம் 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே கோவை உள்பட சில மாநகராட்சிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார். கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 77 வார்டுகளுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கவும், அவர்களுக்கு ஆதரவு திரட்டவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவைக்கு வர உள்ளார். கோவையில் 4 நாட்கள் தங்கியிருந்து சுழற்சி முறையில் பிரசாரம் செய்ய உள்ளார் என மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.