தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வில் விலக்கு அளிக்கும் மசோதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஒப்படைத்தனர். ஆனால் அவர் ஏழை மாணவர்களுக்கு எதிராக இந்த மசோதா உள்ளது என திருப்பி அனுப்பியுள்ளார். இது மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுவதாகவும், ஒன்றிய அரசு ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். அப்போது அவர்கள் தமிழக ஆளுநர் ரவியின் உருவப்படத்தை கிழித்தெறிந்து கோஷமிட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போலீஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் 18 பேரை கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.