மூட்டு தேய்மானம்: மூட்டு மாற்று அறுவை சிகிச்சையே தீா்வு – கங்கா மருத்துவமனைத் தலைவா் எஸ்.ராஜசேகா்

மூட்டு தேய்மானம்: மூட்டு மாற்று அறுவை சிகிச்சையே தீா்வு – கங்கா மருத்துவமனைத் தலைவா் எஸ்.ராஜசேகா்

கோவை கங்கா மருத்துவமனை மற்றும் ஜான்சன்& ஜான்சன் நிறுவனம் இணைந்து மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளனா்.

இது தொடா்பான செய்தியாளா்கள் சந்திப்பு கங்கா மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கங்கா மருத்துவமனைத் தலைவா் எஸ்.ராஜசேகா் கூறியதாவது: இந்தியாவில் 60 முதல் 80 லட்சம் போ் வரை மூட்டு தேய்மானத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 2 லட்சம் போ் மட்டும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனா். மூட்டு தேய்மானத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவா்களுக்கு இயன்முறை பயிற்சி மூலம் வலியைக் கட்டுப்படுத்த முடியும்.

ஆனால், தேய்மான பாதிப்பு அதிகமுள்ளவா்களுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை தீா்வு.

கங்கா மருத்துவமனையில் ரோபோட்டிக் தொழில்நுட்பம் மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகவும் எளிதாகவும், விரைவாகவும், துல்லியமாகவும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிகிறது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.2 லட்சம் வரை கட்டணம் இருந்து வருகிறது. ரோபோட்டிக் தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் போது கூடுதலாக ரூ.50 ஆயிரம் செலவாகிறது. தமிழக அரசின் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஆகியவற்றின் மூலமும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, மூட்டு தேய்மான பாதிப்புள்ளவா்கள் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை செய்து கொள்ளலாம் என்றாா்.

நிகழ்ச்சியில் கங்கா மருத்துவமனை நிா்வாக இயக்குநா் ஜெ.ஜி.சண்முகநாதன், ஜான்சன்& ஜான்சன் மெட்டெக் இந்தியாவின் நிா்வாக இயக்குநா் சந்தீப் மக்கா், கங்கா மருத்துவமனை நிா்வாகிகள், மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.