அறநிலையத்துறையில் 80 பேருக்கு பணி ஆணை

சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் விஜய் நேற்று, இந்து சமய அறநிலையத் துறை சார்பில், விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், ரூ.23 கோடியே 67 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள முடிகாணிக்கை மண்டபம், அன்னதானக் கூடம், விருந்து மண்டபங்கள் மற்றும் 235 பூஜைப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

அறநிலையத்துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் உதவிப் பொறியாளர் , உதவி ஸ்தபதி மற்றும் செயல் அலுவலர் (நிலை-1 மற்றும் நிலை-3) ஆகிய பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 80 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். மேலும், விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி, மாரியம்மன் கோயிலில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.23 கோடியே 67 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள முடிகாணிக்கை மண்டபம், 125 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து உணவருந்தும் வகையிலான அன்னதானக் கூடம், 25 பேர் அமர்ந்து உணவருந்தும் வகையிலான 24 விருந்து மண்டபங்கள் மற்றும் 235 பூஜைப் பொருட்கள் விற்பனை நிலையங்களை பக்தர்களின் பயன்பாட்டிற்கு முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.

இந்து சமய அறநிலையத் துறைக்காக முதன்முறையாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் உதவிப் பொறியாளர் மற்றும் உதவி ஸ்தபதி பணியிடங்களுக்கு தெரிவுசெய்யப்பட்டு பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், தலைமைச் செயலாளர் சாய்குமார், அறநிலையங்கள் துறை செயலாளர் குமரகுருபரன், அறநிலையத்துறை ஆணையர் வினய், கூடுதல் ஆணையர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.