“தீவிரவாதத்தின் செய்தி தொடர்பாளர்” பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரை கடுமையாக சாடிய ஜெய்சங்கர்..!

டெல்லி : ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாட்டிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தானை கடுமையாகச் சாடியுள்ளார்.

“ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டின் வெளியுறவு அமைச்சராக இங்கு வந்துள்ள பூட்டோ சர்தாரி அதற்கேற்ப நடத்தப்பட்டார். பாகிஸ்தானின் முக்கிய ஆதாரமான பயங்கரவாதத்தை நியாயப்படுத்துபவர் மற்றும் பயங்கரவாதத்தின் செய்தித் தொடர்பாளர்” எனத் தெரிவித்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் 2 நாள் மாநாடு இந்தியாவின் கோவாவில் நேற்று தொடங்கியது. இதில், சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே சமூகமான உறவு இல்லாத சூழலில், கோவாவில் நடைபெற்று வரும் மாநாட்டில் பாகிஸ்தகான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவும் பங்கேற்றார்.

இந்த மாநாட்டில் இன்று பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கடுமையாக சாடினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நோக்கமே பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்துவதுதான் என கூறிய மத்திய அமைச்சர் ஜெய்சங்க்ர், “பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான நிதி ஆதாரத்தை முடக்க வேண்டும். நாடுகள் வேறுபாடு இல்லாமல் தீவிரவாதத்தை தடுக்க வேண்டும் என்றார்.

மேலும், பயங்கரவாதத்தின் மீதான பார்வையை விலக்கிக்கொண்டால் அது எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் நலன்களுக்கு தீங்கு விளைவித்துவிடும். கொரோனாவுக்கு எதிராகவும், அதன் தொடர் விளைவுகளுக்கு எதிராகவும் உலகம் போராடிக்கொண்டிருந்தபோது, பயங்கரவாதம் தடையின்றி அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது என்பதில் இந்தியா உறுதியான நம்பிக்கையை கொண்டிருக்கிறது.

பயங்கரவாதத்திற்கு நிதி செல்லும் பாதையை முடக்க வேண்டும். எந்த ஒரு தனி நபரோ அல்லது நாடோ அரசுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வதை நாம் அனுமதிக்க முடியாது. அச்சுறுத்தலை எதிர்த்து போராடுவது எஸ்சிஓ-வின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. இணைப்பு என்பது முன்னேற்றத்திற்கு முக்கியம். அதேவேளையில், அது அனைத்து உறுப்பு நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளிப்பதாக இருக்க வேண்டும்.” என்றார்.

ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து பேசிய ஜெய்சங்கர், ஆப்கன் மக்களின் நலனை நோக்கியதாக நமது முயற்சிகள் இருக்க வேண்டும். அவர்களுக்கு உடனடியாக மனிதாபிமான உதவிகளை அளிப்பது, உண்மையில் அனைவரையும் உள்ளடக்கிய அரசை உறுதிப்படுத்துவது, பயங்கரவாதத்தை எதிர்ப்பது, போதைப்பொருள் கடத்தலை எதிர்ப்பது, பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பது ஆகியவை நமது முன்னுரிமைகளாக இருக்க வேண்டும்” என்று பேசினார்.

இந்த மாநாடு முடிந்தபிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டின் வெளியுறவு அமைச்சராக இங்கு வந்துள்ள பூட்டோ சர்தாரி அதற்கேற்ப நடத்தப்பட்டார். பாகிஸ்தானின் முக்கிய ஆதாரமான பயங்கரவாதத்தை நியாயப்படுத்துபவர் மற்றும் பயங்கரவாதத்தின் செய்தித் தொடர்பாளராகவே, அவரது நிலைப்பாடுகள் எஸ்சிஓ கூட்டத்தில் விமர்சிக்கப்பட்டன” எனத் தெரிவித்தார்.

காஷ்மீரில் இன்று தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இது இந்தியாவை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் தான் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிலும், அதன் பிறகு செய்தியாளர் சந்திப்பிலும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரை இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாட்டுக்கு வந்த அமைச்சர்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் கைகொடுக்க வந்தபோது அதை மறுத்து, கைகூப்பி மட்டும் வணக்கம் தெரிவித்தார். இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.