சண்டிகர்: பஞ்சாபில் பல முறை எம்எல்ஏ.,வாக இருந்தவர்களுக்கு இனி ஒரு முறை எம்எல்ஏவாக இருந்ததற்கான பென்சனை (ஓய்வூதியம்) மட்டுமே வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.பஞ்சாபில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து அக்கட்சியின் பகவந்த் மான் முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில் அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: பஞ்சாபில் உள்ள முன்னாள் எம்எல்ஏ.,க்கள், எத்தனை முறை வெற்றிப் பெற்றிருந்தாலும், அவர்களுக்கு இனி ஒரு முறை எம்எல்ஏவாக இருந்ததற்கான பென்சனை (ஓய்வூதியம்) மட்டுமே வழங்கப்படும். சில முன்னாள் எம்எல்ஏ.,க்கள் பென்சனாக ரூ.5.25 லட்சம் வரை பெறுகின்றனர். இவர்களுக்கான குடும்ப ஓய்வூதியமும் குறைக்கப்படும்.எம்எல்ஏ.,க்கள் உள்பட நமது அரசியல் தலைவர்கள், தேர்தலின்போது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என கைக்கூப்பி ஓட்டு கேட்டு வெற்றிப் பெறுகின்றனர்.
அதுவே, 2, 3 முறை வெற்றிப் பெற்றாலோ, தோல்வி அடைந்தாலோ, தேர்தலில் சீட் கிடைக்காத எம்எல்ஏ.,க்களோ அவர்கள் லட்சக்கணக்கில் பென்சன் பெறுகிறார்கள். சிலர் எம்எல்ஏ.,வாக இருந்து பின்னர் எம்.பி.,யாக வெற்றிப்பெற்றாலும், அவர்களும் பென்சன் வாங்குகின்றனர். இதனால் கோடிக்கணக்கான நிதிச்சுமை ஏற்படுகிறது. இனி இந்த வகையில் சேமிக்கப்படும் பணம், பஞ்சாப் மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Leave a Reply