அமெரிக்காவிலிருந்து விலகி செல்கிறதா சவுதி அரேபியா..? ஜோ பைடன் அதிர்ச்சி.!!

வாஷிங்டன் : சீனாவுக்கு அந்த நாட்டின் கரன்சியான ‘யுவான்’ வாயிலாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய மேற்காசிய நாடான சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. இதனால், சர்வதேச அளவில் டாலருக்கான முக்கியத்துவம் குறைந்தவிடும் என்பதால், அமெரிக்கா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.தற்போது உலகெங்கும் நடக்கும் வர்த்தகங்களில் பெரும்பாலும், அமெரிக்காவின் கரன்சியான டாலரின் அடிப்படையிலேயே செய்யப்படுகின்றன. அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா இடையே நீண்ட காலமாக நல்ல உறவு இருந்து வந்துள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெயை, சீன கரன்சி யுவானிலேயே பரிவர்த்தனை செய்ய சவுதி அரேபியா முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பேச்சு நடந்து வருகிறது.சவுதி அரேபியாவின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில், 25 சதவீதம் சீனாவுக்கே செல்கிறது.

இத்தனை ஆண்டுகளாக டாலரின் அடிப்படையில் பரிவர்த்தனை நடந்து வந்த நிலையில், அதை கைவிட சவுதி அரேபியா முன்வந்துள்ளது,அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அந்நாடு சவுதி அரேபியாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே, அமெரிக்கா – சீனா இடையே மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில், அமெரிக்க பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள சீன தொழில்நுட்ப நிறுவனங்களின் மதிப்பு வெகுவாக சரிந்துள்ளது.இதனால், அமெரிக்க பங்குச் சந்தையில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளன.இது ஒருபுறம் இருக்க, கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக வேகமாக குறைந்து வருகிறது.

ஒரு பேரலுக்கு, 20 டாலர் வரை குறைந்துள்ளது. இப்படி, அமெரிக்க டாலர் பல வகைகளில் பாதிப்புகளை சந்தித்து வருகிறது.இந்நிலையில், சவுதி அரேபியாவின் முடிவு, அமெரிக்காவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ஏற்கனவே, ஒரு பக்கம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் மோதல்; மறுபக்கம் சீன அதிபர் ஷீ ஜிங்பிங்குடன் மோதல் என, ஜோ பைடன் சர்வதேச அரங்கில் சதுரங்கம் விளையாடி வருகிறார்.பொருளாதார தடை விதிக்கப்படும் என, அமெரிக்கா விடுத்த மிரட்டல்கள், அந்த நாட்டுக்கே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால், சவுதி அரேபியா – சீனா ஒப்பந்த விவகாரத்தில் ஜோ பைடனின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.