இங்க கொரோனாவா?..அப்படியெல்லாம் இல்லையே.. மறுக்கும் சீனா.. எச்சரிக்கும் அமெரிக்கா..!

பெய்ஜிங்: சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மோசம் அடைந்து வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், “அப்படியெல்லாம் இல்லையே..

இங்க எல்லாம் நார்மலாதானே இருக்கு” என்ற ரீதியில் சீனா கருத்து தெரிவித்துள்ளது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை கோபமடையச் செய்துள்ளது.

கடந்த முறையை போலவே இந்த முறையும் சீனா தங்கள் நாட்டு கொரோனா பாதிப்புகளை மூடி மறைப்பதாகவும், இதனால் மீண்டும் உலகம் பேராபத்தில் சிக்கப்போவதாக அமெரிக்க ஊடகங்கள் எச்சரித்துள்ளன.

மேலும், கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், சீனா அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கி வருவதற்கும் பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் வேகம் எடுத்திருப்பதுதான் உலகம் முழுவதும் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலவரத்தை போலவே, சீனாவில் இருந்து தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கூட சீனாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. சீனாவில் நிலவி வரும் இந்த விபரீத சூழலால், உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா பரவிவிடுமோ என்ற அச்சம் சூழ்ந்துள்ளது.

சீனாவில் தற்போது 5 வகை உருமாறிய கொரோனா வைரஸ்கள் பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ்களில் 3 வகை தொற்றுகள் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது. இன்றைய சூழலில், சீனா முழுவதும் நாளொன்றுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், தினமும் 15 லட்சம் பேர் பெருந்தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். சீனாவின் ஷாங்காய், பெய்ஜிங் உள்ளிட்ட பெருநகரங்களில் மருத்துவமனைகள் மனித சடலங்களால் நிரம்பி வழியும் வீடியோக்கள் சர்வதேச ஊடகங்களில் தினம் தினம் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில், சர்வதேச ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் நேற்று ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “சீனாவில் கொரோனா தொற்று பரவல் இருக்கிறது. அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டிருக்கிறது. மக்களின் உயிர்தான் முக்கியம் என்ற கொள்கையுடன் அரசு செயல்பட்டு வருகிறது. இதனால் கொரோனா பரவல் நன்றாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், சில சர்வதேச ஊடகங்களில் சீனாவில் கொரோனா தொற்றால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும், வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் சீனா தோல்வியடைந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின்றன. இது உண்மைக்கு புறம்பானது. இங்கு இயல்பு நிலையே நிலவி வருகிறது” என அவர் கூறினார்.

இதனிடையே, சீனாவின் இந்த விளக்கத்தை ஏற்க அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மறுத்துள்ளன. அதேபோல, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் சர்வதேச ஊடகங்களும் சீனா கூறுவதை ஏற்கவில்லை. இதுகுறித்து அமெரிக்க ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், “சீனாவில் தினசரி கொரோனோ தொற்றால் ஆயிரக்கணக்கானோர் இறந்து வருகிறார்கள். சீன ஊடகங்களை தவிர மற்ற அனைத்து ஊடகங்களும் இந்த செய்திகளை வெளியிட்டு வருகின்றன. கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும் போது, அனைத்து கட்டுப்பாடுகளையும் சீனா நீக்கியுள்ளது. இதனால் சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு பயணம் செய்வோரால் உலகம் முழுவதும் கொரோனா மீண்டும் பரவ வாய்ப்பு இருக்கிறது. சீனாவின் இந்த நடவடிக்கையை அனைத்து நாடுகளும் இணைந்து தடுக்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.