பத்திரப்பதிவுத் துறையில் ரூ 25,000 கோடி வருவாய் ஈட்ட இலக்கு – அமைச்சர் பி.மூர்த்தி தகவல்.!!

பதிவுத் துறையில் இடைத் தரகர்களை அனுமதிக்கக்கூடாது, உரிமையாளர்களே நேரடியாக பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி சென்னையில் விருகம்பாக்கம், கோடம்பாக்கம் பதிவுத் துறை அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் .

பத்திரப் பதிவுத் துறை

ஆய்வு செய்த பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், “பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டோம். பொதுமக்களுக்கு சிரமம் இன்றி பத்திரங்களை விரைவில் பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடப்பாண்டிற்கு 25,000 கோடி ரூபாய் வருவாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த இலக்கை அடைய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பதிவு செய்யும் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவுத் துறையில் ஸ்டார் 3.0 என்ற மென்பொருள் திட்டம் விரைவில் செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் மூலம் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பத்திரப்பதிவுத்துறையில் உள்ள குறைபாடுகள் களையப்படும். பதிவுத்துறையில் இடைத்தரகர்களை அனுமதிக்க கூடாது, உரிமையாளர்களே நேரடியாக பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், போலி பத்திர பதிவுகளை தடுக்கும் வகையில் அதை கண்டறிய அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.” என்றார்.

இந்த திடீர் ஆய்வின்போது வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.