ஈரோடு இடைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியா..? இன்று முக்கிய ஆலோசனை..!

மிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக அங்கம் வகித்தது.

அதன் பிறகு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் இடப்பங்கீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டால் கூட்டணியில் இருந்து விலகியது. அதன் பிறகு அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் இடையே அவ்வப்பொழுது கருத்து மோதல் ஏற்பட்டு வந்தது. இருப்பினும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக நீடிப்பதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிமுக மூத்த நிர்வாகிகள் பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தனர். இதற்கு காரணம் பாஜகவின் தலைமை ஓபிஎஸ்.,க்கு ஆதரவாக இருப்பதாக பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா காலமானதை ஒட்டி நேற்று அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தமிழகத்தில் அரசியல் தீ பற்றி கொண்டது.

அதிமுகவின் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் நேற்று அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து இடைத்தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இன்று காலை 11 மணிக்கு அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் ஜி.கே வாசனை அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தை முடிவில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே வாசன் அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே எனது நோக்கம் என பேசி இருந்தார்.

இந்த நிலையில் அதிமுகவின் மற்றொரு கூட்டணி கட்சியான பாஜக, அதிமுக தலைமையுடன் எந்தவித பேச்சு வார்த்தையும் நடத்தாமல் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று இரவு 14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக நாளை பாஜக மையக்குழு கூட்டம் கடலூரில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு முன்பு கடலூரில் நாளை காலை செயற்குழு கூட்டமும் நடைபெற உள்ளது அதனை தொடர்ந்து மாலை மையக்குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டங்களில் எதிர் வரும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகள் தீவிரப்படுத்துவது குறித்தான ஆலோசனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 15 பேர் கொண்ட பாஜக குழு ஆலோசனை வழங்கவுள்ளது. இதன் மூலம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.