டெல்லியில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்துவதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவ்விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக அமலாக்கப்பிரிவு குற்றம் சாட்டி இருக்கிறது. இதில் டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிபிஐ அதிகாரிகள் இந்த ஊழல் தொடர்பாக ஐதராபாத் உட்பட நாடு முழுவதும் ரெய்டு நடத்தியுள்ளனர். டெல்லி துணை முதல்வர் சிசோடியாவும் இதில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த ஊழல் குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு தனித்தனியாக விசாரித்து வருகிறது. அமலாக்கப்பிரிவு இந்த ஊழல் தொடர்பாக அமித் அரோரா என்பவரை கைது செய்து செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அமலாக்கப்பிரிவு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், `குருகிராமில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் அமித் அரோரா தனது வாக்குமூலத்தில், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு ரூ.100 கோடி லஞ்சம் கொடுத்த சவுத் குரூப்பில் கவிதா மிகவும் முக்கியமான நபர் என்று தெரிவித்துள்ளார்.
விஜய் நாயர் மூலம் இந்த பணம் கொடுக்கப்பட்டுள்ளது. விசாரணையில் ‘சவுத் குரூப்’ என்ற நிறுவனத்திடமிருந்து ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் சார்பாக ரூ.100 கோடியை விஜய் நாயர் பெற்றுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. சவுத் குரூப் சரத் ரெட்டி, கவிதா, மகுந்த ஸ்ரீனிவாசுலு ரெட்டி ஆகியோர் கட்டுப்பாட்டில் இருப்பதாக கைது செய்யப்பட்டுள்ள அமித் அரோரா விசாரணையில் தெரிவித்துள்ளார். டெல்லி அரசில் இடம் பெற்று இருக்கும் சில ஆம் ஆத்மி தலைவர்கள் டெல்லி மதுபானக்கொள்கையை தங்களுக்கு சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் கருவியாக பயன்படுத்தினர் என்றும் அமலாக்கப்பிரிவு வழக்கறிஞர் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதோடு இதில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இருக்கும் டெல்லி துணை முதல்வர் சிசோடியா, அர்விந்த் கெஜ்ரிவால் உதவியாளர் உட்பட 36 பேர் லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பான 170 போன் உரையாடல்களை அழித்துவிட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கவிதா தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் தலைவர் சந்திரசேகர் ராவ் மகள் ஆவார். அதோடு கவிதா சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். ஏற்கனவே சந்திரசேகர் ராவ் பாஜகவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். இதனால் அமலாக்கப்பிரிவு சந்திரசேகர் ராவ் மகளை டெல்லி மதுபானக்கொள்கை ஊழலில் சேர்த்திருப்பதாக கூறப்படுகிற்து. தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி இன்னும் இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
Leave a Reply