சிறந்த பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு சர்வதேச விருது..!!

இளையராஜாவுக்கு சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த பின்னணி இசைக்கான விருது ‘ஏ ப்யூட்டிஃபுல் ப்ரேக்-அப்’ படத்திற்கு இசையமைத்ததற்காக கிடைத்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்கள் இதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தனது தம்பி கங்கைஅமரனுடன் சேர்ந்து மீண்டும் பணியாற்றுகிறார் இளையராஜா. அடுத்தடுத்து அவரிடம் பல மாற்றங்கள். வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படத்தில் இளையராஜா இசையில் பாடல் எழுதுகிறார் கங்கைஅமரன். வெற்றிமாறனின் ‘விடுதலை’, விஷாலின் ‘துப்பறிவாளன்-2’, விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’, சிபி சத்யராஜின் ‘மாயோன்’, விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’, ‘நினைவெல்லாம் நீயடா’, சுசிகணேசன் ‘வஞ்சம் தீர்த்தாயடா’ என பல படங்கள் இளையராஜா இசையில் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.

இவை தவிர, பிற மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். அந்த வகையில், ‘ஏ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ என்ற ஆங்கில படத்துக்கும் இளையராஜா இசையமைத்துள்ளார்.

அஜித் வாசன் என்பவர் இயக்கியுள்ள இந்தப் படத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த ‘5 நேச்சர்ஸ் மூவிஸ் இண்டர்நேஷனல்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

சமீபத்தில் இந்தப் படம் அம்ஸ்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அந்த விழாவில், சிறந்த பின்னணி இசைக்கான விருதை அந்தப் படம் தட்டிச் சென்றுள்ளது. இதற்கான சான்றிதழ் இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதேபோல், இந்த விருது வென்றதை படக்குழு நிறுவனமும் வீடியோ மூலம் அறிவித்துள்ளது.