மாஸ்க், சானிடைசர்க்கு இனி குட் பாய்.. கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கம்… தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு.!!

சென்னை : கொரோனா தொடர்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை இனி பின்பற்ற வேண்டிய அவசியமில்லை எனவும், அதே நேரத்தில் தடுப்பூசி, முகக்கவசம், தனிமனித இடைவெளி ஆகியவை சுய விருப்பத்தின் அடிப்படையில் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு சீனாவின் வூகான் மாநிலத்தல் கண்டறியப்பட்ட கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் லட்சக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கிய தோடு உலக அளவில் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியது.

2020ஆம் ஆண்டு இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அதற்கடுத்ததாக தமிழகத்தில் பரவி லட்சக்கணக்கானோரை பாதித்தது. ஆயிரக்கணக்கானோரை தமிழகத்தில் பலி கொண்ட இந்த வைரஸ் காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி , சானிடைசர் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசும் மாநில அரசுகளும் வலியுறுத்தின.

இந்த நிலையில் இந்தியாவில் தொடர்ந்து கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை சரிவை சந்தித்து வரும் நிலையில் மார்ச் மாத இறுதியில் கொரோனா நெறிமுறைகளும் கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருவதாக மத்திய அரசு கூறியது. மேலும் அந்தந்த மாநிலங்களில் பாதிப்பை கருத்தில் கொண்டு மாநில அரசு முடிவு எடுக்கலாம் எனவும் கூறியது. உத்திரபிரதேசம், ஹரியானா , மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா தொடர்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அவசியமில்லை எனவும், தடுப்பூசி, முகக்கவசம், தனிமனித இடைவெளி ஆகியவை சுய விருப்பத்தின் அடிப்படையில் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் சுகாதாரதுறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா காலத்தில் பொது சுகாதார சட்டத்தின்படி தமிழக அரசு விதித்திருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் அரசின் நிலையான வழிகாட்டுதல்களான தனி மனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை சுய விருப்பத்தின் அடிப்படையில் பொது மக்கள் பின்பற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள மக்களில் 92 சதவீதம் பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 75 சதவீதம் பேர் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டிருப்பதாகவும், மேலும் தடுப்பு ஊசி செலுத்தாதவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.