இன்ஸ்டாகிராம் மூலம் காதல் : நர்சிங் மாணவி காதலனுடன் ஓட்டம்..!

கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள அங்காளகுறிச்சியை சேர்ந்த 19 வயது
மாணவி. இவர் அந்த பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு
படித்து வந்தார்.

இந்தநிலையில் மாணவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம்
மூலமாக வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் 2 பேரும்
நட்பாக பழகி வந்தனர். நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி
செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வாலிபருடனான காதலை கைவிடுமாறு
கூறினர். ஆனால் மாணவி காதலை தொடர்ந்து வந்தார். இதனால் அடிக்கடி
குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று மாணவி கல்லூரிக்கு செல்வதாக தனது பெற்றோரிடம கூறி விட்டு
சென்றார். ஆனால் கல்லூரி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு
திரும்பி வரவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால் எந்த
பலனும் இல்லை. அக்கம் பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில் மாணவி தனது
காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.

இது குறித்து மாணவியின் பெற்றோர் காதலனுடன் ஓட்டம் பிடித்த தங்களது மகளை
கண்டு பிடித்து தரும்படி ஆழியாறு போலீசில் புகார் செய்தனர். புகாரின்
பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகிறார்கள்.