ட்ரான்ஸ்ஃ பார்மர் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை- அறப்போர் இயக்கம் வலியுறுத்தல்..!

சென்னை: மின்வாரியத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக முறையான விசாரணை நடத்தி, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் மின்மாற்றி வாங்கியதில் ரூ.397 கோடி ஊழல் நடைபெற்றதாகவும், ஒப்பந்ததாரர்கள் கூட்டு சதியில் ஈடுபட்டதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது. இதற்கு மின்வாரியம் அளித்த விளக்கத்தில், ‘2011 முதல் ஒப்பந்த நிறுவனங்கள் ஒரே விலைப்புள்ளியை சமர்ப்பித்துள்ளன. மின்மாற்றிகள் கொள்முதலில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் அறப்போர் இயக்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஆட்சியிலும் கூட்டு சதி நடந்துள்ளது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் 315 கிலோவாட் மின்மாற்றியை ரூ.5.48 லட்சத்துக்கு வாங்கிய நிலையில், 250 கிலோவாட் மின்மாற்றியை தமிழக மின்வாரியம் ரூ.7.29 லட்சத்துக்கு வாங்கியுள்ளது.

காப்பர் சுருளி மின்மாற்றியை, அலுமினியம் சுருளி மின்மாற்றியை விட 3 மடங்கு விலை கொடுத்து வாங்கியது நியாயமல்ல. இதுபோன்ற முறைகேடுகளால் தமிழக மின்வாரியத்துக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, மின்வாரிய முறைகேடுகள் தொடர்பாக முறையான விசாரணை நடத்த வேண்டும். வெளிப்படையான டெண்டர் கோர வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.