விண்வெளி துறையில் அசுர பாய்ச்சலில் கலக்கும் இந்தியா… வியந்து பார்க்கும் உலக நாடுகள்..!

டெல்லி: விண்வெளி துறையில் இந்திய அசுர பாய்ச்சலை நடத்தி வரும் நிலையில், இந்தியாவில் ஒரு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ரெடியாகி வருகிறது.

விண்வெளி குறித்த ஆய்வுகள் கடந்த நூற்றாண்டில் இருந்தே தீவிரமாக நடந்து வருகிறது. அப்போது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே தான் விண்வெளி ஆய்விலும் கடும் போட்டி இருக்கும்.

ஆனால், இப்போது அமெரிக்கா, ரஷ்யாவை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் விண்வெளி துறையில் இந்தியா வேற லெவலில் சென்று கொண்டு இருக்கிறது. உலக நாடுகளே இந்தியாவை வியந்து பார்க்கிறது.

அதேபோல கடந்த நூற்றாண்டில் பெரும்பாலும் அரசுத் துறைகளே விண்வெளி துறையில் முதலீடு செய்தன. இது செலவுகளை அதிகரித்தது மட்டுமின்றி, போட்டிகள் இல்லாததால் புதிய தொழில்நுட்பங்கள் வருவதிலும் தாமதம் ஆனது. ஆனால், இந்த நூற்றாண்டில் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. விண்வெளி துறையில் தனியார் முதலீடுகள் கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்து உள்ளது.

விண்வெளி ஆராய்ச்சி துறையில் மிக முக்கியமான நிறுவனம் என்றால் அது ஸ்பேஸ்எக்ஸ் தான். எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்து உள்ளது. பொதுவாக ராக்கெட்டை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்த முடியாது. ஆனால், இந்த நிலையை மாற்றி, ஒரே ராக்கெட்டை பல முறை யூஸ் செய்யும் நுட்பத்தை ஸ்பேஸ்எக்ஸ் கண்டுபிடித்தது. இதனால் ராக்கெட் ஏவுவதற்கு ஆகும் செலவு சுமார் 40% வரை குறைந்தது.

நாசா கூட இப்போதெல்லாம் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலமே சாட்டிலைட்டை அனுப்புகிறார்கள். இந்தச் சூழலில் தான், இந்தியாவிலும் விண்வெளி துறையில் தனியார் முதலீடுகள் தொடங்கி உள்ளது. இதன் முதல் மற்றும் முக்கிய படியாக முற்றிலுமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தனியார் ராக்கெட் விக்ராம் எஸ் நேற்று காலை 11.30க்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 2.3 நிமிடங்களில் 80 கிமீ மீட்டர் சென்ற அந்த ராக்கெட், 4.48 நிமிடங்களில் வேலையை முடித்துவிட்டு வங்கக் கடலில் விழுந்தது.

மொத்தம் 83 எடை கொண்ட இந்த விக்ராம் எஸ் ராக்கெட் எல்லா நிலைகளிலும் துல்லியமாகச் செயல்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த விக்ரம் எஸ் ராக்கெட்டை தெலுங்கானாவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் உருவாக்கி உள்ளது. இதன் பின்னர், விக்ரம் எஸ் ராக்கெட்டை பயன்படுத்தி லான்ஞ் செய்யப்படும் சாட்டிலைட்களின் எண்ணிக்கை வரும் காலத்தில் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ஸ்கைரூட் நிறுவனத்தின் சிரீஷ் பள்ளிகொண்டா கூறுகையில், “இது எங்கள் முதல் முயற்சி. எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை இது உலகத்திற்குக் காட்டும் வகையில் அமைந்து உள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பல விக்ரம் ராக்கெட்களை ஏவ உள்ளோம். ஏற்கனவே, எங்கள் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு தங்கள் சாட்டிலைட்களை அனுப்பப் பலரும் எங்களைத் தொடர்பு கொண்டு வருகின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.

விக்ரம் ராக்கெட்டின் தொழில்நுட்பம் குறைந்த பூமியின் சுற்றுப்பாதையில் அதிக எடையுள்ள சுமைகளைச் செலுத்தும் திறன் கொண்டதாகும். இந்த வெற்றியுடன் ஸ்கைரூட் நிற்கவில்லை. சொல்லப்போனால் இதை வெறும் தொடக்கம் என்றே அவர்கள் கூறுகிறார்கள். இப்போது ஸ்கைரூட் நிறுவனம் விக்ரம் ராக்கெட்டில் மூன்று வெவ்வேறு வேரியன்டுகளை உருவாக்கி வருகிறது.

விக்ரம்-I ராக்கெட் லோ எர்த் ஆர்பிட்டிற்கு 480 கிலோ பேலோடை எடுத்துச் செல்லக் கூடியது. விக்ரம்-II ராக்கெட் 595 கிலோ பேலோடை எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அடுத்து விக்ரம்-III ராக்கெட் 815 கிலோ பேலோடை 500 கிமீ வரை குறைந்த Low Inclination Orbitக்கு எடுத்துச் செல்லக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் திட்டமிட்டபடி வெற்றியடைந்தால் அது இந்திய விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களுக்கு மிகப் பெரிய பூஸ்டாகவே இருக்கும்.

கடந்த 2018ஆம் ஆண்டில் ஐஐடி காரக்பூரில் படித்த பவன் சந்தனா, ஐஐடி மெட்ராஸில் படித்த பாரத் டாக்கா ஆகியோர் இணைந்து இந்த ஸ்கைரூட் நிறுவனத்தை அவர்கள் உருவாக்கி உள்ளனர். வெறும் இரண்டு ஆண்டுகளிலேயே அவர்கள் முழு அளவிலான திரவ உந்து இயந்திரத்தை வெற்றிகரமாகச் சோதனை செய்தனர். அதைத் தொடர்ந்து திடமான ராக்கெட் நிலை (solid rocket stage) சோதனையையும் அவர்கள் வெற்றிகரமாக நடத்தினர்.

அதேநேரம் இந்தியாவில் விண்வெளி துறையில் நுழையும் நிறுவனம் ஸ்கைரூட் மட்டுமில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ், 15 வினாடிகள் தனது இன்ஜினை சோதனை செய்தது. மேலும், வரும் காலத்தில் இஸ்ரோவின் சிறிய செயற்கைக்கோள் ஏவுகணை வாகனங்களும் விரைவில் தனியார் நிறுவனங்களால் தயாரிக்கப்படும் சூழல் உருவாகும் என கூறப்படுகிறது.