ரஷ்யாவுக்கு எதிரான ஐநா பொதுச்சபை வாக்கெடுப்பையும் புறக்கணித்தது இந்தியா.!!

டெல்லி: ஐநா பொதுச்சபையில் ரஷ்யாவை எதிர்க்காமல் இந்தியா நடுநிலை நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்க மறுத்துவிட்டது.

ஐநா பொது சபையில் நேற்று ரஷ்யாவிற்கு எதிராக வாக்கெடுப்பு நடைபெற்றது. ஐநா மனித உரிமை ஆணையத்தில் ரஷ்யா இடம்பெறலாமா வேண்டாமா என்பது தொடர்பாக இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த வாக்கெடுப்பை ரஷ்யா கடுமையாக எதிர்த்தது. ரஷ்யாவின் நட்பு நாடான சீனாவும் இந்த வாக்கெடுப்பை கடுமையாக எதிர்த்தது. இந்தியா இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தது.

இந்த நிலையில் நேற்று நடந்த வாக்கெடுப்பில் அமெரிக்கா, ஐரோப்பாவில் இருக்கும் பெரும்பாலான நாடுகள், இங்கிலாந்து உட்பட மொத்தம் 93 நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக வாக்களித்தன. இதில் 24 நாடுகள் ரஷ்யாவிற்கு ஆதரவாக வாக்களித்தது. 58 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. இந்த நிலையில் பெரும்பான்மை வாக்கெடுப்பின் அடிப்படையில் ரஷ்யா ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.

ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்தர தூதர் டிஎஸ் திருமூர்த்தி, இந்தியா நடுநிலையாகவே செயல்படும் என்று அவையில் பேசினார். வாக்கெடுப்பை புறக்கணித்ததற்கான காரணத்தை விளக்கிய அவர், இந்தியா இதில் நடுநிலை நிலைப்பாட்டை மட்டுமே இதுவரை எடுத்துள்ளது. காரணம் மற்றும் தேவை கருதியே இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்.

இந்தியா அமைதியின் பக்கம் மட்டுமே நிற்கிறது. பேச்சுவார்த்தை, ராஜாங்க ரீதியிலான உடன்படிக்கை மட்டுமே தேவை. ரத்தத்தின் மூலமும், எதிர்ப்பின் மூலமும் எந்த விதமான தீர்வையும் பெற்றுவிட முடியாது. இந்தியா ஏதாவது ஒரு பக்கம் நிற்க விரும்புகிறது என்றால் அது கண்டிப்பாக அமைதியின் பக்கம்தான். தொடர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், அதற்கு இந்தியா எஎப்போதும் ஆதரவு அளிக்கும். இதுவே எங்கள் நிலைப்பாடு, என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை அமெரிக்கா விமர்சனம் செய்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த குடியரசு கட்சி எம்பி பிரையன் இது பற்றி பேசுகையில்.. இந்தியாவின் இந்த நிலைப்பாடு வருத்தம் அளிக்கிறது. இந்தியாவின் தூதரோடு நேற்றுதான் நான் சந்திப்பு நடத்தினேன், இந்தியா ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றேன். ஆனால் இந்தியா அந்த நிலைப்பாட்டை எடுக்கவில்லை. இந்தியாவின் நிலைப்பாடு கவலை அளிக்கிறது என்று குறிப்பிட்டார்.

93 நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக வாக்களித்த நிலையில், இந்தியா எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்காமல் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளது. இதை வெள்ளை மாளிகையின் முக்கிய புள்ளியும், அமெரிக்காவின் தேசிய பொருளாதார கவுன்சில் தலைவரும், அதிபர் பிடனின் ஆலோசகருமான டீஸ் விமர்சனம் செய்துள்ளார். அதில், இந்தியாவின் நிலைப்பாடு ஏமாற்றம் அளிக்கிறது. இந்த விவகாரத்தில் இந்தியா, சீனா எடுத்த நிலைப்பாடுகள் ஏமாற்றம் அளிக்கிறது.

ரஷ்யாவுடன் நெருக்கமான உறவை மேற்கொள்வதன் மூலம் இந்தியாவிற்கு… நீண்ட காலத்திற்கு.. தீவிரமாக பின்விளைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ரஷ்யாவுடன் நெருக்கமாக இருக்கும் நாடுகள் நீண்ட கால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் தொனியில் பேசி உள்ளார். முன்னதாக இந்தியா வந்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் தலீப் சிங், ரஷ்யாவுடன் வருத்தம் செய்யும் நாடுகள் பின்விளைவுகளை சந்திக்கும் என்று இந்தியாவை மிரட்டும் வகையில் பேசியது குறிப்பிடத்தக்கது.