திமுகவினரின் ஜாமீனுக்கு எதிராக மேல்முறையீடு செய்த வருமானவரித்துறை..!

ரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 26 ஆம் தேதி திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அந்த வகையில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ய முற்பட்டபோது அங்கு கரூர் மாநகராட்சி மேயர் கவிதா தலைமையில் கூடிய 100க்கும் மேற்பட்ட திமுகவினர் வருமான வரித்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தனர்.

மேலும் வருமான வரித்துறை அதிகாரிகள் மீதும் அவர்கள் பயணித்த கார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் காயமடைந்த 4 வருமானவரித்துறை அதிகாரிகள் கரூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வருமானவரித்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 3 திமுக கவுன்சிலர்கள் உட்பட 19 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பெண் வருமானவரித்துறை அதிகாரியை தாக்கியதால் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கிய புகாரில் கைதான 19 திமுகவினரும் ஜாமீன் வழங்க கோரி கரூர் மகிளா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி திமுகவினர் 19 பேருக்கும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் வருமானவரித் துறை அதிகாரிகள் தாக்கிய வழக்கில் 19 திமுகவினருக்கு கரூர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வருமானவரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டபோது அதற்கு எதிராக இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கரூர் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.