கேரளாவில் நிபா வைரசுக்கு 2 பேர் பலி… தமிழ்நாடு எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம்.!!

கேரளாவில் பரவும் நிபா வைரஸ் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் தமிழக எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கேரளா மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் மருதோங்கரை பகுதியில் ஒருவர் காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் 30-ம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் இறந்து போனார். அவருக்கு நிபா வைரஸ் தாக்கியதற்கான அறிகுறி இருந்தது இந்நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த மற்றொரு நபர் நேற்று மரணம் அடைந்தார்.மேலும், கடந்த மாதம் இறந்தவரின் குழந்தைகள் இருவருமே காய்ச்சல் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது ஒருபுறம் நேற்று மரணமடைந்தவரின் தொடர்பில் இருந்த சிலரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஒருவரும் நேற்று (செப்.11) ஒருவரும் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர். இறந்த இருவரும் தொடர்பில் இருந்துள்ளனர்.

இதனிடையே நிபா வைரஸ் காரணமாக இறந்திருக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் கருதி உயிரிழந்தவர்களின் மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டது. சோதனை முடிவின் படி, நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இதனை உறுதியும் செய்தார்.

இதனிடையே நிபா வைரஸை கட்டுப்படுத்த கேரள அரசுடன் இணைந்து மத்திய அரசு செயல்படும் என்றும் இதற்காக மத்திய அரசின் சிறப்பு குழு கேரளத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

வெளவால் மூலம் நிபா வைரஸ் பரவும் நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு நிபா வைரஸ் காரணமாக கோழிக்கோட்டில் ஒரே குடும்பத்தில் மூன்று பேர் மரணம் அடைந்தனர. அதைத் தொடர்ந்து கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவி சுமார் 17-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அதுபோல் ஏற்படக்கூடாது என்று கருதும் கேரளா சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது. கோழிக்கோடு மாவட்டம் முழுவதும் அலார்ட் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பால் இறந்துபோனதை அடுத்து, தமிழ்நாட்டில் வைரஸ் பரவுவதைத் தடுக்க எல்லையோர மாவட்டங்களின் சோதனை சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிரபடுத்த தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.