குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் – 14 பாகிஸ்தானியர்கள் கைது.!!

குஜராத் கடல் பகுதியில் அடிக்கடி பாகிஸ்தான் படகுகள் போதைப் பொருளுடன் பிடிபடுகிறது. இதையடுத்து குஜராத் எல்லையோர கடல் பகுதியில் கடற்படை ரோந்து கப்பல்களும், ரோந்து விமானங்களும் இரவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜ்ரத்தன் என்ற கடலோர பாதுகாப்புப்படை கப்பலில் குஜராத் தீவிரவாத தடுப்பு படையினரும், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் இடம் பெற்று இருந்தனர். அப்போது குஜராத் கடலில் சர்வதேச எல்லையோரம் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் படகு ஒன்று நடமாடுவதை ராஜ்ரத்தன் ரோந்துப்படகு கண்டு பிடித்தது.

அதன் பார்வையில் இருந்து படகு தொடர்ந்து தப்பித்துக்கொண்டிருந்தது. ஆனாலும் அப்படகை மடக்கி கப்பலில் இருந்த அதிகாரிகள் சோதனை நடத்தினர். தீவிர சோதனையில் கப்பலில் 86 கிலோ போதைப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டது. உடனே படகும், அதில் இருந்த 14 பாகிஸ்தான் பிரஜைகளும் போர்ப்பந்தர் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். படகில் இருந்த போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.600 கோடியாகும். கடந்த மாதம் 12ம் தேதி இரவும் இதே போன்று குஜராத் கடற்பகுதியில் இரவில் ரெய்டு நடத்தி படகில் இருந்து போதைப்பொருளை கடலோர பாதுகாப்பு படையினரும், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும் பறிமுதல் செய்தனர். கடந்த பிப்ரவரி மாதம் இதே போன்று குஜராத் கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு படையினர் இரவில் சோதனை நடத்தி பாகிஸ்தான் கப்பலில் இருந்து 132 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.1000 கோடியாகும். கடந்த ஆண்டு மே மாதம் இதே போன்று கடற்படையினர் குஜராத் கடற்பகுதியில் பாகிஸ்தான் கப்பலில் ரெய்டு நடத்தி 12 ஆயிரம் கோடி மதிப்பு போதைப்பொருளை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.