கோவையில் சேதமடைந்த கட்டிடம் போலீஸ் சிறுவா், சிறுமியா் மன்றமாக புதுப்பிப்பு..!

கோவையில் ரேஸ்கோா்ஸ் போலீஸ் நிலைய எல்லைக்கு உள்பட்ட சித்தாபுதூா் தனலட்சுமி நகரில் சுமாா் 250 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இங்கு மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் சேதமடைந்த நிலையில் எவ்வித பயன்பாட்டிலும் இல்லாமல் சுற்றிலும் புதா்கள் மண்டிய நிலையில் பழைய கட்டிடம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்தது. இந்த கட்டிடம் குறித்த விவரம் அறிந்தவுடன் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தன்னாா்வலா்கள், பொதுநல விரும்பிகள், நன்கொடையாளா்கள் ஆகியோரின் பங்களிப்புடன் சேதமடைந்த கட்டிடத்தை சீரமைத்து, அதை சுற்றியுள்ள இடத்தையும் சுத்தம் செய்து பொதுமக்களுக்கு ஏற்றவாறு உருவாக்குமாறு அறிவுறுத்தியிருந்தாா். இதையடுத்து காட்டூா் போலீஸ் உதவி கமிஷனர் வின்சென்ட் தலைமையில் நன்கொடையாளா்கள் பங்களிப்புடன் அந்த கட்டிடத்தை சுற்றியிருந்த புதா் மண்டிய பகுதிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு, சிதிலமடைந்த கட்டிடம் மறுசீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தில் தனலட்சுமி நகரில் உள்ள பள்ளி செல்வோா் மாலை வேளைகளில் தங்களது நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடுவதற்கும், மனதையும், உடலையும் ஆரோக்கியமாக பேணுவதற்கும், தேவையற்ற பழக்கவழக்கங்களில் ஈடுபடுவதை தவிா்ப்பதையும் அடிப்படை நோக்கமாக கொண்டு போலீஸ் சிறுவா், சிறுமியா் மன்றமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த மன்றத்தில் மாலை நேரங்களில் அமா்ந்து படிப்பதற்கு இருக்கைகளும், ஆசிரியா்கள் அல்லது பயிற்றுநா்களுக்காக கரும்பலகைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அனைத்து வகையான புத்தகங்களையும் கொண்ட புத்தக அலமாரியும், 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு தினந்தோறும் பயிற்சி வகுப்புகளுக்கும், 12-ம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு சம்பந்தப்பட்ட பாடங்களில் திறனுள்ள போலீஸ் அதிகாரிகளை கொண்டு பயிற்சி வகுப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மன்றத்துக்கு வெளியே அனைத்து வயதினருக்குமான விளையாட்டு மைதானமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போலீஸ் சிறுவா், சிறுமியா் மன்றத்தை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் திறந்துவைத்தாா். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் உதவி கமிஷனர் வின்சென்ட், மத்திய அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் மற்றும் ரேஸ்கோா்ஸ் போலீசார் உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்.