கோவையில் கொரோனா தொற்றை கண்டறிவதில் சிக்கல்: காய்ச்சல் மருந்தால் பரிசோதனையில் இருந்து தப்பும் விமான பயணிகள்-குழப்பத்தில் அதிகாரிகள்..!

கோவை: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் விமான நிலையங்களில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. கோவை விமான நிலையத்திலும் கொரோனா பரிசோதனை மையம் திறக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து வரும் பயனிகளிடம் பரிசோதனை செய்யப்படுகிறது. தானியங்கி உடல் வெப்ப பரிசோதனை எந்திரம் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் சிலர் காய்ச்சலுக்கான மருந்துகளை உட்கொண்டு பயணிப்பதாகவும், அவர்கள் விமான நிலைய வளாகத்தில் பரிசோதனையில் இருந்து தப்பி செல்வதையே நோக்கமாக கொண்டு செயல்படுவதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.