கோவையில் ரூ.3 கோடி மதிப்புள்ள கார்களை வாங்கி நூதன மோசடி- டிராவல்ஸ் அதிபர் கைது..!

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் கடந்த 2018-2019-ம் ஆண்டு அரசு இல்லம் என்ற முகவரியில் ‌‌தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தை நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையத்தை சேர்ந்த வி.வெங்கடேஷ் என்பவர் நடத்தி வந்தார். ‘ தங்கள் நிறுவனத்தில் பொதுமக்கள் காரினை கொடுத்தால் தாங்கள் நிறுவன மூலம் மாதம் ரூ.1000 கொடுப்பதாகவும், புதிய கார்களுக்கான தவணைகள் செலுத்த வேண்டி இருந்தால் தங்கள் நிறுவனமே தவணைத் தொகையை செலுத்துவதாகவும் ஆசை வார்த்தை கூறினார். கார்களை ஒப்பந்த அடிப்படையில் பெற்று கொள்வதாகவும் தெரிவித்தனர். இதனை நம்ப திருப்பூர் பூலுவபட்டியை சேர்ந்த சசிகலா ராணி என்பவர் இந்த நிறுவனத்தில் தன்னிடம் உள்ள காரை ஒப்படைத்தார்.
இந்த அலுவலகத்தில் குமரேசன், பொன்குமார், மணிகண்டன், ஜான், மகேந்திரன் மற்றும் சிலர் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் போன் மூலம் பொதுமக்களிடம் தொடர்பு கொண்டு தங்கள் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 30 புதிய மற்றும் பழைய கார்களை பெற்றுக்கொண்டு சில தவணைகள் மட்டும் பணத்தினை கொடுத்தும் வந்தனர். அதன்பின் காரின் உரிமையாளருக்கு பணத்தொகையும் கொடுக்காமல் காரினையும் திருப்பிக் கொடுக்காமல் நிறுவனத்தை மூடிவிட்டு வெங்கடேசன் மற்றும் ஊழியர்கள் தலைமறைவு ஆகிவிட்டனர்.
இது குறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவில் 2019- ஆண்டுவழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.இந்த வழக்கின் மீது நடவடிக்கை எடுக்க இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் வெங்கடேசன் கோவை ரெயில் நிலைய முன்பு நேற்று கைது செய்யப்பட்டார் அவரிடமிருந்து ரூ.80 லட்சம் மதிப்புள்ள 8 கார்கள் மற்றும் ரூ.8 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.