கோவையில் விஷம் வைத்து 5 நாய்கள் கொலை- போலீசார் விசாரணை..!

கோவை வடவள்ளியை அடுத்த வேடப்பட்டி நாகராஜபுரம் அடுக்கு மாடி குடியிருப்பை
சேர்ந்தவர் பாபுராஜ் (வயது 47). இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.

அவர் அந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு தினமும்
உணவளித்து பார்த்து வருகிறார். அதனால் தெரு நாய்கள் எந்த நேரமும் அவரை
சுற்றி வரும். நேற்று வழக்கம் போல நாய்களுக்கு உணவளிக்க பாபுராஜ்
சென்றார். வெகு நேரமாக அவர் உணவுடன் நாய்களுக்காக காத்திருந்தார். ஆனால் ஒரு சில நாய்கள் மட்டுமே வந்தது. மற்ற நாய்கள் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த
அவர் நாகராஜபுரத்தில் இருந்து பேரூர் ரோட்டில் நாய்களை தேடி நடந்து
சென்றார்.

அப்போது அங்கங்கே அவர் வளர்த்து வந்த 5 நாய்கள் இறந்த கிடந்தது. இதைகண்டு
அதிர்ச்சி அடைந்த அவர் நாய்களின் அருகே சென்று பார்த்தார். அதில் மர்ம
நபர்கள் யாரோ நாய்களுக்கு உணவில் விஷம் வைத்து கொன்றது தெரியவந்தது.
இதுகுறித்து பாபுராஜ் வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து
போலீசார் வழக்குப்பதிவு செய்து நாய்களை விஷம் வைத்து கொன்ற மர்ம நபர்கள்
யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.