உள்நாட்டு உற்பத்தித் திட்டங்களால் பாதுகாப்புத்துறை பொருட்களின் இறக்குமதி குறைந்தது..!

நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை உற்பத்தியை அதிகரிக்க முக்கியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

பீரங்கிங்களுக்கான 155 மில்லிமீட்டர் துப்பாக்கி, இலகுரக போர் விமானமான தேஜஸ், தரையிலிருந்து விண்ணுக்குப் பாயும் ஆகாஷ் ஏவுகணை, சீட்டா ஹெலிகாப்டர், ஐஎன்எஸ் கல்வாரி, ஐஎன்எஸ் சென்னை உள்ளிட்ட பல பாதுகாப்புத் துறைத் தளவாடங்கள் இதில் அடங்கும்.

கடந்த சில ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை உற்பத்தியை அதிகரிக்க வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தியில் சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கை மாற்றங்களை அரசு கொண்டு வந்ததன் காரணமாக உற்பத்தி அதிகரித்துள்ளது.

பாதுகாப்புத் துறை நவீனமயமாக்கவும் உள்நாட்டுக் கொள்முதலை அதிகரிக்கவும் பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உத்ரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் பாதுகாப்புத் தொழில் வழித்தடங்களை அமைப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அரசின் இந்த நடவடிக்கைகள் நீண்ட கால அடிப்படையில் வெளிநாட்டு சார்பையும், இறக்குமதியையும் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாதுகாப்பு கொள்முதல் 2018-2019 ம் ஆண்டில் 46%ஆக இருந்த நிலையில் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை இறக்குமதி 36.7% ஆக குறைந்துள்ளது.

தற்போது 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா பாதுகாப்பு உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது.

2017-18 ம் ஆண்டில் பாதுகாப்பு உற்பத்திப் பொருட்களின் மொத்த ஏற்றுமதி மதிப்பு ரூ.4682 கோடியாக இருந்தது. 2022-2023ம் ஆண்டில் இதுவரை இவற்றின் ஏற்றுமதி ரூ.13,399 கோடியாக உள்ளது.

பாதுகாப்புத் துறைப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் உலகளவில் போட்டித் தன்மையை அதிகரிக்கவும் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தற்சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உருவாக்கப்படும் புதிய தொழில்நுட்பங்கள், எந்தவித கட்டணமுமின்றி தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன.