கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.50000 உடனடி நிதி.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

நாட்டில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தலா ரூ.50,000 வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், நிவாரண நிதி வழங்குவதில் மாநில அரசுகள் காலதாமதம் செய்வதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. குறிப்பாக, ஆந்திர அரசு இந்த நிதியை வேறு வகையில் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இழப்பீடு கிடைக்காதவர்கள் மற்றும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் தங்கள் புகார்களை குறைதீர் குழுவிடம் தெரிவிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. இதுபோன்ற புகார்களுக்கு 4 வாரங்களுக்குள் குறைதீர் குழு தீர்வு காண வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.