இந்திய – சீன எல்லையில் வடமாநில தொழிலாளர்கள் 18 பேர் மாயம் ..!

வடகிழக்கு மாநிலங்களில் பெரிய அளவில் சாலை உள்கட்டமைப்பு அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக , அருணாசல பிரதேசத்தின் குருங் குமி மாவட்டத்தில் இந்திய – சீன எல்லையை ஒட்டிய தமின் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் தொழிலாளர்கள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர் .

அவர்களில் சிலர் கடந்த வாரம் ப்க்ரீத் பண்டிகையை கொண்டாட விடுமுறை தரும்படி பெங்கியா பதோ என்ற ஒப்பந்ததாரரிடம் கோரினர். ஆனால், அவர் அனுமதி தர மறுத்து விட்டார். இதனால், அவர்கள் யாருக்கும் தெரியாமல் கொண்டாட்டத்தில் ஈடுபட, வன பகுதி வழியே கால்நடையாக நடந்து சென்றனர்.

அடர்வன பகுதியில் சென்ற அவர்களை பின்னர் காணவில்லை. அவர்கள் அனைவரும் அசாமை சேர்ந்த தொழிலாளர்கள் என கூறப்படுகிறது. கடந்த வாரம் 19 தொழிலாளர்கள் காட்டுக்குள் காணாமல் போயுள்ளனர்.

தொழிலாளர்களில் ஒருவரது உடல் அருகேயுள்ள ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, மற்ற 18 தொழிலாளர்களும் குமி ஆற்றில் மூழ்கி விட்டார்களா என போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற உள்ளது. இதற்காக மீட்பு குழு ஒன்று அனுப்பி வைக்கப்படும் என ஆணையாளர் கூறியுள்ளார்.