இவான்ஜலிக்கல் சர்ச் உறுப்பினராக உள்ளார் பிரியா ராஜன். கிறிஸ்துவ மதத்தை பின்பற்றும் ப்ரியா, தன்னை தாழ்த்தப்பட்ட இந்து பெண்ணாக காட்டி, சட்டத்தை ஏமாற்றி சென்னை மேயராகி விட்டார் என்று ஆதாரங்களுடன் குற்றாச்சாட்டினை முன்வைத்திருக்கிறது பாஜக.
இதுகுறித்து பிரியா ராஜன் அளித்துள்ள விளக்கத்தில், ”என் மாமா செங்கை சிவத்தையும் இதே சிக்கலுக்கு உள்ளாக்கினர்கள். ஆனால் கடைசியில் மாமாவுக்குத் தான் சாதகமான நிலை ஏற்பட்டது. அதே பிரச்சனையை எனக்கும் ஏற்படுத்துகிறார்கள்.
பாஜகவினர் தான் என்னை கிறிஸ்தவ பெண்ணாக மாற்றும் முயற்சியை செய்கின்றார்கள். தேர்தல் நேரத்தில் நான் சர்ச்சுக்கு சென்று ஓட்டு சேகரித்து உண்மைதான். சர்ச்சில் பாதிரியார்களை சந்தித்து பேசி ஓட்டு கேட்ட புகைப்படங்களை வைத்துக்கொண்டு, என்னை கிருஸ்துவ பெண்ணாக சித்தரிக்கிறார்கள்”என்கிறார்.
தொடர்ந்து அவர் இந்த விவகாரம் குறித்து, ”பாதிரியார் வின்சென்ட் சின்னதுரை தமிழ்நாடு பிஷப் கவுன்சிலின் முன்னாள் செய்தி தொடர்பாளர். அவர் தன் மதத்தின் மீதான ஈர்ப்பில், என்னை கிறிஸ்தவப் பெண் என்று நினைத்து , நான் பதவி ஏற்றுக்கொண்ட நாளில் சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு வாழ்த்து பேனர் வைத்து இருந்தார். அதை வைத்து தான் இப்படி ஒரு பிரச்சனையை கிளப்புகிறார்கள். ஆனால் அதை வைத்து இப்படி ஒரு பிரச்சனை கிளம்பும் என்று எனக்கு தெரியாது. அது மட்டுமல்லாமல் இவான்ஜலிக்கல் சர்ச்சில் நான் உறுப்பினராக இருப்பதாக சொல்கிறார்கள். அப்படியானால் அது தொடர்பான ஆவணங்கள் இருந்தால் அதை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்கிறார் .
மேலும், ”தலித் பெண் ஒருவருக்கு அதுவும் 28 வயதில் மேயர் பொறுப்பு கிடைத்திருப்பதால் சொந்த கட்சியினரே வயிற்றெரிச்சலில் இப்படி புரளியை கிளப்பி விடுகிறார்கள். என்னை சிக்கலில் மாட்டி விட வேண்டும் என்பதற்காகவே பாஜகவினரோடு அவர்கள் மறைமுகமாக கைகோர்த்துக் கொண்டு செயல்படுகிறார்கள். ஆனால் இதையெல்லாம் தைரியமாக எதிர்கொள்வேன். நான் தலைமைக்கு தகவல் சொல்லி விட்டேன். பிரச்சனை என்று வந்தால் சட்டரீதியாக அணுகலாம் என்று கூறி விட்டார்கள். அதனால் இந்த பிரச்சினைகள் பற்றி கவலைப்பட போவதில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
Leave a Reply