நான் கொரோனா தடுப்பூசி போடமாட்டேன்: சீமான் சொன்ன அட்வைஸ்.!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19-ம் தேதி நடக்க இருக்கிறது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்கான பணிகளை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சி சார்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மதுரை ஒத்தக்கடை பகுதியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடை பெற்றது. அதில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் , ‘மதுக்கடை வழக்கில் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்கிறது, ஆனால் கல்வியில் அரசின் கொள்கையில் தலையிடுகிறது. மது குடிப்பதில் தலையிடாது ,படிப்பதில் மட்டும் நீதிமன்றம் தலையிடுகிறது.

நாட்டில் விரும்பிய கல்வி, விரும்பிய உணவு, விரும்பிய ஆடை அணிய முடியாத நிலை உள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தலைவருக்கான பதவிகளுக்கு மறைமுக தேர்தல் என்பதால் பதவிகளுக்கு பேரம் தான் நடைபெறும். திமுக ஆளும்கட்சி ஆனவுடன் சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மட்டுமே அனைத்துக்கட்சி கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடியும் என்கின்றனர். திமுக சின்னத்தில் நின்ற மதிமுக எப்படி தனிக்கட்சி ஆகும். திமுக என்னை வெறுக்கிறார்கள் நானும் திமுகவை வெறுப்பேன்.

எங்கள் கட்சியில் இருந்து திமுகவிற்கு சென்றால் மட்டும் பிரமாண்டமாக பேசுகின்றனர். அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காதது எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் கொரோனா வந்துள்ளது. தடுப்பூசி செலுத்துவதும், செலுத்தாமல் இருப்பதும் உங்கள் விருப்பம். தான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் இல்லை, தடுப்பூசி செலுத்தப்போவதுமில்லை’ என்று தெரிவித்தார்.