சென்னை: தெருவில் கட்சிக் கொடி கட்டிக்கொண்டிருந்த தன்னை இன்று தேசியக் கொடி கட்டிய காரில் பவனி வர வைத்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் என அமைச்சர் சேகர்பாபு உருக்கமுடன் தெரிவித்தார்.
மேலும், மூலவரும் முதலமைச்சர் ஸ்டாலின் தான் உற்சவரும் முதலமைச்சர் ஸ்டாலின் தான் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன்னர் அவர் இதனைக் கூறினார்.
இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய அமைச்சர் சேகர்பாபுவுக்கு சட்டமன்ற உறுப்பினர்களும், சக அமைச்சர்களும் வாழ்த்து மழை பொழிந்தனர். மதிய உணவு இடைவெளிக்கு பிறகு பேசத் தொடங்கிய அமைச்சர் சேகர்பாபு முதல்வர் ஸ்டாலினை பாராட்டி புகழ்ந்ததோடு தனக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது குறித்தும் உருக்கமுடன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
அந்த வகையில் துறைமுகம் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட வாய்ப்பளித்ததுடன் தெருக்களில் கட்சிக் கொடி கட்டிக்கொண்டிருந்த சாதாரண தொண்டனான தன்னை இன்று தேசியக் கொடி கட்டிய காரில் பவனி வர வைத்தவர் முதல்வர் ஸ்டாலின் என்றும் எளியோரும் ஏற்றம் பெற முடியும் என்பதே திராவிட மாடல் ஆட்சி எனவும் பெருமிதம் தெரிவித்தார். மேலும் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக முதல்வர் ஸ்டாலின் உச்சாணிக் கொம்பில் அமராமல் அச்சாணியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் எனத் தெரிவித்தார்.
மேலும், தன்னை தேடி வருபவர்களுக்கு வரம் தரும் மூலவராகவும் வர இயலாதவர்களுக்கும் வீடு தேடிச்சென்று வரம் தரும் உற்சவராகவும் முதலமைச்சர் ஸ்டாலின் திகழ்வதாக அமைச்சர் சேகர்பாபு பாராட்டினார். மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் காலம் பொற்காலமாக இருக்கும் என்ற உறுதியையும் அவர் சட்டசபையில் அளித்தார்.
அமைச்சர் சேகர்பாபு ஒரு களப்பணியாளர் என்பதாலும் அவர் மீது நன்மதிப்பு வைத்திருப்பதாலும் உணவு இடைவெளி முடிந்த கையோடு சில நிமிடங்கள் கூட ஓய்வுக்காக நேரம் செலவிடாமல் சட்டசபையில் அமர்ந்த அவர் உரையை மிகுந்த கவனத்துடன் கேட்டார் முதல்வர் ஸ்டாலின்.
Leave a Reply