பாஜகவின் அடுத்த ஏம் தெலுங்கானா… ஹைதராபாத்தில் தேசிய செயற்குழு கூட்டம்… 2 நாள் முகாமிடும் பிரதமர் மோடி..!!

2022 ஆம் ஆண்டுக்கான பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் இன்று முதல் நடைபெற உள்ளது. 2 நாட்கள் நடைபெற உள்ள கூட்டத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதே நேரத்தில் சார்மினார் பாக்கியலட்சுமி தேவியை தரிசிக்க முக்கிய விஐபிக்கள் வரக்கூடும் என்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று சாமி தரிசனம் செய்கிறார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஹைதராபாத் வருகை தர உள்ளார், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை முதல் 4ஆம் தேதி வரை மொத்த ஹைதராபாத் மாநகரமும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. பிரதமர் மோடி அங்குள்ள நோவோடெல் ஹோட்டலில் தங்க உள்ளார். அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாஜக செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து ஐதராபாத்தில் அரசியல் திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்திற்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் வருகை தர உள்ளதை ஒட்டி உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதே நேரத்தில் சார்மினார் பாக்கியலட்சுமி கோவிலுக்கு வரும் பிரபலங்களின் எண்ணிக்கையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது, இதனால் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். சார்மினார் அதை சுற்றி பேரிகார்டர்கள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் 28 மணி நேரம் முதல் 30 மணி நேரம் வரை மோடியின் வருகையை வெற்றிகரமாக முடிக்கும் வகையில் போலீசார் பலத்த ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஹைதராபாத்தை சுற்றி 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு 144வது பிரிவு விமானங்கள் பறக்க விடப்பட்டுள்ளன.இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 2ஆம் தேதி (இன்று)மதியம் 12. 45 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத் நகருக்கு புறப்படுகிறார்.

2.55 மணிக்கு பேகம்பேட் விமான நிலையத்தை சென்றடைகிறார், அங்கிருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் மதப்பூர் எச்ஐசிசி நோவோடெல் ஒட்டலுக்கு 3.20 மணிக்கு சென்றடைகிறார், அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின் மாலை தேசிய செயற்குழு கூட்டத்தில் மோடி கலந்து கொள்கிறார். இரவு 9 மணி வரை அவர் கூட்டத்தில் பங்கேற்பார்.

ஜூலை 3ஆம் தேதி காலை 10 மணிக்கு கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார், மாலை 4:30 மணி வரை அவர் கூட்டங்களில் கலந்து கொள்கிறார். பல்வேறு விவகாரங்கள் குறித்து செயற்குழு உறுப்பினர்களுக்கு மோடி வழிகாட்ட உள்ளார். அதன்பிறகு ஓட்டலுக்கு செல்லும் அவர் மாலை 5.55 மணிக்கு எச்ஐசிசி நோவோடெல் ஹோட்டலில் இருந்து புறப்பட்டு அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும் விஜய சங்கல்ப சபாவில் பங்கேற்கிறார்.

மாலை 6.30 மணிக்கு பரேடு மைதான சபாவுக்கு மோடி சென்றடைகிறார், 6.30 மணி முதல் 7 முப்பது மணி வரை அவர் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அங்குள்ள மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் பிரதமர் உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து ஜூலை 4-ஆம் தேதி காலை 9 மணிக்கு பேகம்பெட் விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் விஜயவாடா புறப்படுகிறார்…

ஆனால் இதில் பாதுகாப்பு காரணங்களுக்காக சில மாற்றங்கள் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணிவகுப்பு மைதான கூட்டத்திற்கு பிறகு பிரதமர் ராஜ்பவனில் தங்குவார் என மாநகர ஆணையர் சி.பி ஆனந்த் ஏற்கனவே கூறியுள்ளார். இந்த அளவுக்கு ராஜ்பவனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பிரதமர் மோடி தங்கும் பேகம் பேட்டை ராஜ்பவன் சாலையில் 4000 பேரும் அணிவகுப்பு மைதானத்தை சுற்றி 3 ஆயிரம் பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.