பின் வாங்கும் எண்ணம் எனக்கு இல்லை… தடைகளை தட்டி தூக்கிய புடின்… ஒரு நாளைக்கு ரூ.7,600 கோடி வருமானம் ஈட்டும் ரஷ்யா..

உக்ரைன் மீதான தனது போரை ரஷ்யா தொடங்கிய நாளில் இருந்தே பல பொருளாதாரத் தடைகளை உலக நாடுகள் விதித்து வருகின்றன.

ஆனால் ரஷ்யாவிற்கு ஆதரவு அளிக்கும் விதமாக சில நாடுகள் ரஷ்யா உடனான வர்த்தகத்தை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கச்சா எண்ணெய் வர்த்தகம் மூலம் தனது ஆதிக்கத்தைக் காட்டி வருகின்றது ரஷ்யா.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் பொருளாதார ஆலோசகரான ஒலெக் உஸ்டென்கோ, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த காரணத்தால் ரஷ்யாவின் வர்த்தகம், பணப்புழக்கத்தைத் தடுக்க உலக நாடுகள் தடை விதித்துள்ள நிலையிலும் ரஷ்யா தொடர்ந்து அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது எனத் தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் இருந்து மட்டும் ஒரு நாளுக்கு 1 பில்லியன் டாலர் அதாவது 7,608 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை ரஷ்யா சம்பாதித்து வருகிறது என தெரிவித்த உஸ்டென்கோ, ரஷ்யாவின் எண்ணெய் வர்த்தகத்தை தடுக்க புதிய தடைகளை உலக நாடுகள் விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து உள்ளார்.

மேலும், ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பல தடைகளை விதித்தாலும், கச்சா எண்ணையை அதிகமாக வாங்குகின்றன. அவ்வாறு இருக்கும் போது கச்சா எண்ணெய் உற்பத்தியை உலக நாடுகள் அதிகரித்தால் கச்சா எண்ணெய் விலை நிச்சயம் குறையும். குறிப்பாக OPEC நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்தினால் போதும், ஆனால் OPEC நாடுகளிடம் உற்பத்தியை அதிகரிக்க எவ்விதமான திட்டமும் இல்லை என உக்ரைன் பொருளாதார ஆலோசகரான ஒலெக் உஸ்டென்கோ தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதல் மூலம் உக்ரைன் நாட்டின் பொருட் சேதம், வரத்தகப் பாதிப்பு, நிதியியல் பாதிப்பு, மக்கள் துயரம், உயிர் சேதம் எனப் பல பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. உக்ரைன் நாட்டின் பாதிப்பை தீர்க்க உலக நாடுகள் பணம் மற்றும் பொருள் உதவிகளை அளித்து வருகிறது.

எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனையும் தகர்த்தெறிந்து வரும் புடின், இந்த போரில் இருந்து பின் வாங்கும் எண்ணம் இல்லை என்றும் இந்த நவீன உலகில் ரஷ்யா போன்ற ஒரு நாட்டை தனிமைபடுத்துவது என்பது சாத்தியம் இல்லாத காரியம் என புடின் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.