2047ல் இந்திய வெளியுறவு அமைச்சராக வரப்போகிறவரை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது – அமைச்சர் ஜெய்சங்கர் புகழாரம்..!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் பணியாற்றுவது தான் மிகப்பெரிய வலிமையாக இருக்கிறது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் எழுதிய ‘தி இந்தியா வே: ஸ்ட்ரேட்டஜிஸ் ஃபார் அன்செர்ட்டய்ன் வேர்ல்ட்’ (The India Way: Strategies for an Uncertain World) என்ற ஆங்கில புத்தகத்தின் குஜராத்தி மொழிப்பெயர்ப்பு நூல் டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது.

ஒருகாலத்தில் நம் நாட்டின் வெளியுறவுக் கொள்கைக்கு பல கட்டுப்பாடுகள் இருந்தன. வெளியுறவுக்கு சம்பந்தமே இல்லாத காரணிகள் கூட, பல நாடுகளுடனான உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அதில் முதன்மையாக இருந்தது ‘வாக்கு அரசியல்’. சில நாடுகளுடன் நல்லுறவு ஏற்படுத்தினால் அது இந்தியாவின் எதிர்காலத்துக்கு நல்லது எனத் தெரிந்திருந்தாலும், வாக்கு அரசியலை மனதில் வைத்து அந்த நாடுகளிடம் இருந்து விலகிச் சென்ற காலங்கள் எல்லாம் இருந்தன.

ஆனால், இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று என்றைக்கு இஸ்ரேல் சென்றாரோ, அன்றைக்கே வெளியுறவுக் கொள்கையில் இருந்த கட்டுப்பாடுகள் தகர்க்கப்பட்டன. இஸ்ரேலுக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை நரேந்திர மோடிக்கு கிடைத்தது. தற்போது இஸ்ரேலும் இந்தியாவும் இணைந்து பல வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. வெளியுறவுக் கொள்கையில் ‘வாக்கு அரசியல்’ ஆதிக்கம் செலுத்தும் காலம் அன்று முதல் மலையேறிவிட்டது.

இப்போது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சுதந்திரமாக இருக்கிறது. இந்திய மக்களின் நலனை மட்டுமே வைத்து வெளியுறவுக் கொள்கை இன்று வகுக்கப்படுகிறது. வாக்கு அரசியல் உள்ளிட்டவை புறந்தள்ளப்பட்டு விட்டன.

இதே நிலைமை நீடித்தால் எதிர்காலத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மிகச் சிறப்பானதாக இருக்கும். அதை வைத்து பார்க்கும் போது, 2047-ம் ஆண்டில் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகிக்கப் போகும் நபரை நினைத்து எனக்கு பொறாமையாக இருக்கிறது. ஏனெனில், இப்போது நாங்கள் அமைத்து தந்த பாதையின் உச்சத்தில் அன்று நமது வெளியுறவுக் கொள்கை நடைபோட்டுக் கொண்டிருக்கும். ஆனால், ஒன்றை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் வெளியுறவுத் துறை அமைச்சராக இருப்பது தான் மிகப்பெரிய வலிமையாக நான் உணர்கிறேன்.

நம்மில் பலர் ஜனநாயகத்தை கேலி கிண்டல் செய்கிறோம். இந்தியாவில் ஜனநாயகம் இருப்பதால்தான் நம்மால் வளர்ச்சி அடைந்த நாடாக மாற முடியவில்லை என சிலர் நினைக்கின்றனர். மேலும், இந்தியாவின் மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாததற்கும் ஜனநாயகத்தையே சிலர் காரணம் காட்டுகின்றனர். அவர்களுக்கு ஒன்றைக் கூறிக் கொள்கிறேன். இந்தியாவின் மக்கள் தொகை தற்போது கணிசமாக குறைந்து வருகிறது. கல்வியும், விழிப்புணர்வும்தான் இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

சில நாடுகள் சர்வாதிகாரத்தை பயன்படுத்தி மக்கள் தொகையை கடந்த காலங்களில் கட்டுப்படுத்தின. ஆனால் தற்போது அந்த நாடுகளில் பாலின விகித சமநிலை தவறவிட்டது. அதுமட்டுமல்லாமல், இளைஞர்களின் எண்ணிக்கையை விட முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மக்கள்தொகை பெருக்கத்தை விட மோசமான சூழலில் இன்று அந்த நாடுகள் சிக்கியுள்ளன.

ஜனநாயக வழியில் சென்றதால் மட்டுமே இந்தியாவால் இன்று மக்கள்தொகை பெருக்கத்தை சிறப்பாக கையாள முடிந்திருக்கிறது. ஜனநாயகத்தில் சில குறைகள் இருக்கின்றன. பலர் அதை கேலியும் செய்யலாம். ஆனால் தொலைநோக்காக பார்த்தால் சர்வாதிகாரத்தை விட ஜனநாயகமே சிறந்தது என்ற உண்மை புலப்படும்.

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவதை சிலர் குறைக்கூறுகின்றனர். இந்தியாவின் தற்போதைய நிலைமை பற்றியும், நமது வருவாய் பற்றியும் அவர்களுக்கு தெரியவில்லை. நாட்டு மக்கள் நலனுக்காகவே ரஷ்யாவிடம் இருந்து நாம் குறைந்த விலையில் எரிபொருள் வாங்கிக் கொண்டிருக்கிறோம். உலகில் சில பிரச்சினைகள் நடந்தால், நாம் உடனே அதில் தலையிடக் கூடாது. இதுவும் ஒருவகையான வெளியவுறவுக் கொள்கைதான். இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.