சிபிஐ விசாரணை உத்தரவை எதிர்த்து நாங்கள் எப்படி விசாரிப்பது..? முடிவெடுக்க வேண்டியது தனி நீதிபதி தான்.. பொன்மாணிக்க வேலுக்கு ஐகோர்ட் கேள்வி..!

சென்னை : சிபிஐ விசாரணை உத்தரவை எதிர்த்து ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கை எப்படி விசாரிக்க முடியும் என சென்னை ஐகோர்ட் சிறப்பு அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இந்த சிறப்பு அமர்வில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என பொன் மாணிக்கவேல் கூடுதல் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், குற்ற விசாரணை தொடர்புடைய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தனி நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்த வழக்கை எப்படி நாங்கள் விசாரிக்க முடியும் எனறு பொன் மாணிக்கவேலுக்கு சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

சிலைக் கடத்தல் தடுப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஓய்வுபெற்ற தன்னை சிறப்பு அதிகாரியாக நியமிக்கும்படி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல், கடந்த 2019-ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போதைய தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங் ஆகியோருக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, சிலை கடத்தல், சிலை மாயம், சிலை செய்ததில் முறைகேடு தொடர்பான வழக்குகளில் சிபிஐ விசாரணை, காவல் நிலைய விசாரணை, 4 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என வெவ்வேறு உத்தரவுகளை தனி நீதிபதி பிறப்பித்துள்ளார். இதனால் குழப்பம் ஏற்படுகிறது. எனவே சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இந்த சிறப்பு அமர்வில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என கூடுதல் மனு தாக்கல் செய்திருந்தார்.

பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்த அந்த மனு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன் மாணிக்கவேல் தரப்பில், சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் சிறப்பு அமர்வுதான் விசாரிக்க வேண்டும், கண்காணிக்க வேண்டும் என்ற நிலையில், தனி நீதிபதி விசாரித்து உத்தரவிட்டது தவறு என்று வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “யார் எந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்பது குறித்து தலைமை நீதிபதிதான் முடிவெடுப்பார். எனவே இதுதொடர்பாக தனி நீதிபதியிடம் முறையிட வேண்டும். குற்ற விசாரணை முறை தொடர்புடைய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தனி நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்த வழக்கை எப்படி விசாரிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த மனுவில் உத்தரவு பிறப்பிப்பதாக கூறி ஒத்தி வைத்தனர்.