இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது” – அமித் ஷா பேச்சுக்கு ஓ.பன்னீர் செல்வம் பதிலடி.!!

இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என அ.இ.அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்லாமல், ஆங்கில மொழிக்குப் பதிலாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது” எனப் பேசியது விவாதமானது.

இந்த நிலையில், அ.இ.அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தி மொழி தேவை என்கிற பட்சத்தில், இந்தி மொழியை தாங்களாகவே மனமுவந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக கற்றுக் கொள்ளலாம். அதே சமயத்தில் இந்தி திணிப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பேரறிஞர் அண்ணா கூறியிருக்கிறார்கள்.

நீண்ட நாட்களாகத் தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கைதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பேரறிஞர் அண்ணா அவர்களின் இரு மொழிக் கொள்கையில் அ.இ.அ.தி.மு.க உறுதியாக இருக்கிறது என்பதையும், தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட போதே அ.தி.மு.க-வின் நிலைப்பாடு தெளிவாக்கப்பட்டு விட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். பேரறிஞர் அண்ணா அவர்கள் வழியில் இருமொழிக் கொள்கையில் அ.இ.அ.தி.மு.க உறுதியாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.