மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்ள கேரளா புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!!

கேரளாவில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் கேரளாவிற்கு புறப்பட்டு சென்றார்.

கேரளா மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாடு ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை கண்ணூரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என அக்கட்சியின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அழைப்பை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டில் கலந்து கொள்வதாக உறுதியளித்தார். இந்நிலையில், கண்ணூரில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை விமான நிலையத்திலிருந்து கேரளாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

கேரள மாநிலம் கண்ணூரில் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் “மத்திய- மாநில உறவுகள்” எனும் தலைப்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அங்கு சிறப்புரையாற்றுகிறார். மாநிலங்களின் உரிமையை பற்றிய கூட்டமாக இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி சார்ந்த தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் இன்று இரவே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.