ஜார்கண்ட்டில் ஹேமந்த் சோரன் கைது… ராஞ்சியில் இந்தியா கூட்டணி பிரமாண்ட பேரணி..!

ராஞ்சி: அமலாக்கத்துறையால் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட தலைவர்கள் இன்று ராஞ்சியில் பிரமாண்ட பேரணியை நடத்துகின்றனர்.

இதில் அரவிந்த் ஜெக்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

லோக்சபா தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் பாஜகவும், இந்தியா கூட்டணியும் ஆட்சியைக் கைப்பற்ற தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. முன்னதாக அமலாக்கத்துறையால் ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரனும், டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டனர். இதில் ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். ஆனால், கெஜ்ரிவால் இன்னும் முதலமைச்சராகவே தொடர்கிறார்.

இப்படி இருக்கையில், இந்த கைது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி சார்பில் இன்று ராஞ்சியில் பிரமாண்ட பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலும், ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரனும் பங்கேற்கின்றனர். இது தவிர, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, ஆர்ஜேடியின் லாலு பிரசாத், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பரூக் அப்துல்லா, சமாஜவாதியின் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பேரணியில் பங்கேற்கின்றனர்.

ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் தங்கள் பலத்தை காட்ட இருப்பதாக இந்தியா கூட்டணி தெரிவித்திருக்கிறது. இந்த கூட்டத்தில் 5 லட்சம் பேர் வரை திரள்வார்கள் என்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர். பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக நடைபெறும் பேரணிக்கு ‘உல்குலன் நீதி பேரணி’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்த பேரணி குறித்து பேசிய ஜார்க்கண்ட் முதலமைச்சர் சம்பாய் சோரன், “ஹேமந்த் சோரன் கைதை கண்டித்து இந்த பேரணியை நாங்கள் நடத்துகிறோம். சர்வாதிகாரத்திற்கு எதிராக இந்த பேரணி இருக்கிறது. அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் நாம் காப்பாற்ற வேண்டும். டெல்லியிலும், ஜார்க்கண்ட்டிலும் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த பேரணிக்கு மொத்தம் 28 கட்சிகளின் ஆதரவு இருக்கிறது.

தென்னிந்தியாவிலும் எங்கள் பேரணிக்கு ஆதரவு இருக்கிறது. அங்கு லோக்சபா தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருவதால் இந்த பேரணியில் அவர்களால் பங்கேற்க முடியவில்லை பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், பெண்களுக்குப் பாதுகாப்பான சூழல் இல்லாதது ஆகியவையும் இந்த பேரணியை நடத்துவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.