குன்னூரில் தொடர் மழை: சிம்ஸ் பூங்கா ஏரியில் படகு சவாரி நிறுத்தம்..!!

தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவ மழை தான் அதிக அளவு பெய்யும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழையும் தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குன்னூர் பகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது. குன்னூரில் முக்கிய சுற்றுலா தளமாக தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான சிம்ஸ் பூங்கா உள்ளது.
இந்த பூங்காவில் ஏரி உள்ளது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஏரியில் படகு சவாரி நடைபெற்று வருகிறது. ஏரியில் 14 படகுகள் இயக்கப்படுகின்றன. தற்போது தொடர் மழை பெய்து வருவதால் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இதன் காரணமாக பூங்கா ஏரியில் படகு சவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது. சவாரி இல்லாததால் படகு இல்லத்தில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.