நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.!!

சென்னை: நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 2-வது நாளாக நேற்று முன்தினமும் கனமழை பெய்தது.

அங்கு 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

நேற்று (ஜூலை 6) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 20 செ.மீ. கனமழை பதிவாகியுள்ளது. முந்தைய நாளில் 18 செ.மீ. மழை பதிவானது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் முதல் பெய்து வரும் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் அவற்றை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிறிய அளவிலான மண் சரிவுகள் ஏற்பட்டன. அவற்றை உடனுக்குடன் தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைதுறையினர் அப்புறப்படுத்தினர்.

குன்னூர் – கோத்தகிரி சாலையிலுள்ள லாரி நிலையத்தில் பாரம் ஏற்றி நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது, ராட்சத மரம் சரிந்து விழுந்தது..