டெல்லியில் வெளுத்து வாங்கிய கனமழை… ஆறாய் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்… காணாமல் போன சாலைகள்.. நீந்தி செல்லும் வாகனங்கள்.!!

டெல்லியில் வரலாறு காணாத அதிகனமழை காரணமாக முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள திடீர் வானிலை மாற்றத்தால் அங்கே பல இடங்களில் கனமழை கொட்டி வருகிறது.

இதனால் டெல்லி உட்பட பல நகரங்களில் கனமழை பெய்துள்ளது. டெல்லியில் 24 மணி நேரத்தில் 153 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. இது 1982-க்கு பின் அங்கே ஜூலை மாதத்தில் பெய்த அதிகபட்ச மழை இதுவாகும்.

டெல்லி மட்டுமின்றி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கனமழை பெய்தது. ஹரியானா மாநிலத்தின் குருகிராமின் பல பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், அங்கே மின் சேவையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் டெல்லியின் ரோகினி பகுதியில் மழை காரணமாக சாலையின் நடுவே ராட்சத பள்ளம் ஒன்று உருவானது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மேலும், இன்றும் டெல்லியில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், பள்ளிகளுக்கு விடுறை அளித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. வடமாநிலங்களில் வரும் ஜூலை 15 வரை லேசான மழை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கனமழை கொட்டும் நிலையில், ராஜஸ்தானின் ராஜ்சமந்த், ஜலோர், பாலி, அஜ்மீர், அல்வார், பன்ஸ்வாரா, பரத்பூர், பில்வாரா, பூண்டி, சித்தோர்கர், தௌசா, துல்பூர், ஜெய்ப்பூர் மற்றும் கோட்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடர் மழையால் யமுனை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதையடுத்து கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மழை காரணமாக வடக்கு ரயில்வே பகுதிகளில் சுமார் 17 ரயில்களை ரத்து செய்ததுடன், சுமார் 12 ரயில்கள் மாற்றுப் பாதையில் அனுப்பப் பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.