ஸ்ரீரங்கம் உள்ளிட்ட வைணவத் தலங்களில் சொர்க்கவாசல் இன்று திறப்பு: கோவிந்தா… கோவிந்தா…. முழக்கங்களுடன் பக்தர்கள் சாமி தரிசனம்..!

திருச்சி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு புகழ்பெற்ற பெருமாள் கோயில்களில் பரம்பத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் அதிகாலையில் திறக்கப்பட்டது.

இதில் பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து சொர்க்க வாசலில் நுழைந்து சாமி தரிசனம் செய்தனர். பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதையொட்டி நடைபெற்ற பகல் பத்து நிகழ்ச்சியில் தினமும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று அதிகாலை 4.45 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

அப்போது நம்பெருமாள் பராமவாசலை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரே உள்ள திருக்கொட்டகையில் காட்சி கொடுத்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் நீண்ட வரிசையில் காத்திருந்து சொர்க்கவாசலில் நுழைந்து நம்பெருமாளை தரிசனம் செய்தனர். 108 திவ்யதேசங்களில் ஒன்றான சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா, என்ற பக்தி பரவசத்துடன் முழங்கி சொர்க்கவாசல் வழியாக நுழைந்து சாமி தரிசனம் செய்தனர். அதேபோல தமிழ்நாட்டில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டன.