கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு துப்பாக்கி கடத்தல் – 4 பேர் கைது.!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். குறிப்பாக அம்பை கோடாரங்குளம் விலக்கு பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக சொகுசு கார் ஒன்று வந்துள்ளது.

அப்போது அதனை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர்.

தொடர்ந்து காரை திறந்து சோதனை செய்தபோது காரின் உள்ளே ஒரு துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்கள் இருந்துள்ளது. மேலும் அத்துப்பாக்கிக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் சட்டவிரோதமாக வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. காரில் இருந்த இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியதில் சுரண்டை ஆணைகுளம், பிள்ளையார் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த மாயகிருஷ்ணன் (38) மற்றும் ஆய்குடி எம்ஜிஆர் காலனியை சேர்ந்த பழனி (26) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று அம்பாசமுத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் அறிவுறுத்துதலின் படி அம்பை காவல் ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையில் விசாரணை நடத்தினர், விசாரணையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தனிப்படை அமைத்து கேரள மாநிலத்திற்கு விரைந்துள்ளனர்.

குறிப்பாக கேரள மாநிலம் இடுக்கி பூம்பாறை பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த பீரான் மற்றும் சிவலிங்கம் ஆகிய் இரண்டு பேரையும் கைது செய்து அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கேரள மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டில் விற்பனை செய்வதற்காக கை துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கடத்தி வந்ததாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

முன்னதாக அவர்களிடமிருந்து ஒரு துப்பாக்கி, 6 தோட்டாக்கள் மற்றும் ஒரு இனோவா கார் போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது யாருக்கு விற்பனை செய்ய கொண்டு வரப்பட்டது. இதற்கு முன் இது போன்ற சம்பவம் நடந்துள்ளதா?என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு சட்டவிரோதமாக கை துப்பாக்கியை விற்பனை செய்ய கடத்தி வந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.