குஜராத் கலவர வழக்கு: பாஜகவின் மாஜி அமைச்சர் உள்பட அனைவரும் விடுவிப்பு..!

குஜராத் மாநிலம், அகமதாபாத் அருகே நரோடா காம் என்னுமிடத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த கலவர வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க.தலைவர்களில் ஒருவருமான மாயா கோட்னானி மற்றும் பஜ்ரங் தளத்தின் பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 60-க்கும் மேலானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆமதாபாத் அருகே நரோடா காம் என்னுமிடத்தில் நடந்த கலவரத்தில் 11 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் மற்றும் அவர்களது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த குஜராத் சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.

எனினும் இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஷம்ஷத் பதான் தெரிவித்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கும் எதிரானதாகும். சிறப்பு புலனாய்வுக்குழு குற்றஞ்சாட்டப்பட்ட 86 பேரையும் முறையாக விசாரிக்கவில்லை. இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. சம்பவம் நடந்து 20 ஆண்டுகள் ஆனாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க தொடர்ந்து போராடுவோம் என்று பதான் கூறினார். இந்த கலவர வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்து.

எந்த அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது என்று தெரியவில்லை. நீதிமன்ற தீர்ப்பின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது என்றும் பதான் குறிப்பிட்டார்.

2017 ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாயா கோட்னானிக்காக பாதுகாப்பு தரப்பு சாட்சியாக நீதிமன்றத்தில் ஆஜரானார். 2002 ஆம் ஆண்டு நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தபோது மாயா கோட்னானி அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். குஜராத்தின் கோத்ராவில், ஹிந்து யாத்ரீகர்கள் பயணம் செய்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிப்பு சம்பவமும் அதைத் தொடர்ந்து கலவரமும் அப்போதுதான் நடந்தது.

நரோடா பாடியா கலவர வழக்கில் 97 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மாயா கோட்னானி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் குஜராத் உயர்நீதிமன்றம் பின்னர் அவரை விடுதலை செய்தது.

நரோடா காம் என்னுமிடத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கு 9 முக்கிய வழக்குகளில்

ஒன்றாகும். இவற்றை உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்து வந்தது.

இந்த கலவர வழக்கில் 80-க்கும் மேலானவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. ஆனால், வழக்கு விசாரணையின் போதே 18 பேர் உயிரிழந்துவிட்டனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு அரசியல் ரீதியில் பெரும் புயலை கிளப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 11 பேர் மன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.