சென்னையில் ரூ.25 கோடி மதிப்பிலான பச்சைக்கல் லிங்கம் மீட்பு-இருவர் கைது.!!

சென்னை: சென்னையில் ரூ.25 கோடி மதிப்பிலான தொன்மையான பச்சைக்கல் லிங்கத்தை விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து பச்சைக்கல் லிங்கம் மீட்கப்பட்டது. சென்னை பூந்தமல்லி அருகே தொன்மையான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைக்கல் லிங்கமொன்று பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், கடத்தப்பட உள்ளதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்ய சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் இயக்குனர் ஜெயந்த் முரளி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, பச்சைக்கல் லிங்கம் வைத்திருப்பவர்களிடம் சிலைகளை வாங்கும் வியாபாரிகள் போல் நடித்து பேசியுள்ளனர்.

அப்போது அச்சிலை ரூ.25 கோடி என அதிகாரிகள் எனத் தெரியாமல் விலையை கூறியுள்ளனர். பின்னர் சிலையை காண்பித்ததும் அவர்களை கையும் களவுமாக அதிகாரிகள் பிடித்தனர். இதனையடுத்து சிலையை விற்க முயன்றதாக சென்னை வெள்ளவேடு புதுகாலனியை சேர்ந்த பக்தவச்சலம் (எ) பாலா (வயது 46) மற்றும் சென்னை புதுசத்திரம் கூடப்பாக்கம் கலெக்டர் நகரை சேர்ந்த பாக்கியராஜ் (வயது 42) ஆகியோரை கைது செய்து போலீஸ் எஸ்.ஐ., ராஜசேகர், அவர்களிடம் இருந்து சிலையை கைப்பற்றினார்.

பின்னர், அந்நபர்களை சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தார். கைப்பற்றப்பட்ட அந்த பச்சைக்கல் லிங்கத்தில், உலோகத்தால் ஆகிய நாகாபரணம் உள்ளது. அதை தாங்கி அதன் பின்புறம் பறக்கும் நிலையில் கருடாழ்வர் சுமார் 29 செ.மீ உயரமும் 18 செ.மீ அகலமும் கொண்டுள்ளது. அதன் எடை சுமார் 9 கிலோ 800 கிராம் எடையும் உள்ளது. இந்தச் சிலையானது 500 ஆண்டுகள் தொன்மையானது எனவும் கூறப்படுகிறது.