கோவை ஆட்சியர் தலைமையில் பசுமை குழு கூட்டம்- காலியிடங்களில் மரக்கன்றுகள் நட முடிவு.!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் மாவட்ட பசுமைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா சிறுதுளி, கீரின் கேர் அமைப்பு உள்ளிட்ட தன்னார்வலர்கள் அமைப்புகள் மற்றும் வனசரக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர்,
“இத்திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் ஆண்டிற்கு கோவை மாவட்டத்தில், வனத்துறை சார்பில் 10,42,538 மரக்கன்றுகளும், மாநகராட்சி சார்பில் 50,000 மரக்கன்றுகளும், மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பில் 75,462 மரக்கன்றுகளும், தன்னார்வ அமைப்பு மூலம் 30,000 மரக்கன்றுகளும், தனியார் நாற்றாங்கால்கள் மூலம் 60,000 மரக்கன்றுகளும், என மொத்தம் 12,58,000 மரக்கன்றுகளும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் தேக்கு, மகாகனி, மலைவேம்பு, சவுக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, வேம்பு, ஈட்டி, புங்கன், சரக்கொன்றை, புளி, கொடுக்காபுளி, கொய்யா, நெல்லி பாதாம் மற்றும் நாவல் போன்ற மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
தற்போது வரை வனத்துறை சார்பில் 5,70,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. பிறத்துறைகளின் சார்பில் மரக்கன்றுகள் நடவுசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும், மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய வளாகங்களிலும், கோயில் நிலங்கள், உள்ளிட்ட இடங்களையும், பிறதுறைகளுக்கு சொந்தமான காலி இடங்களை கண்டறிந்து, அங்கு மரகன்றுகள் நடவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி மாவட்டத்தின் வனப்பரப்பை அதிகரிக்கச் செய்து, பசுமையை ஏற்படுத்தும் நோக்குடன் மாவட்டத்திற்கான இலக்கை விரைவாக எய்திட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் வனத்துறை மூலம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்தல் மற்றும் அதற்காக எடுக்கப்பட்டு வரும் பசுமை நடவடிக்கைகள் குறித்தும் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்தான விளக்கக்காட்சி திரையிடப்பட்டன.