அனைத்து விநாயகர் சிலைகளிலும் ஜிபிஎஸ்.. கூகுள் மேப்பில் டிராக்கிங் மூலம் கண்காணிப்பு… பிரச்னை செய்தாலே உடனே கைது தான்.. போலீஸ் எச்சரிக்கை..

வேலூர்: விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் நிலையில், அதற்கு போலீசார் தரப்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை நேற்று முன் தினம் கோலமாகக் கொண்டாடப்பட்டது. இதற்காக அரசியல் தலைவர்கள் தொடங்கி, பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

இதற்காக நாடு முழுதும் விநாயகர் சிலைகளும் வைக்கப்பட்டு இருந்தன. இந்த விநாயகர் சிலைகளுக்குப் பூஜைகள் நடத்தப்பட்டு, நீர் நிலைகளில் கரைக்கப்படும்,தமிழ்நாட்டிலும் இந்து முன்னணி, தொடங்கி பல்வேறு அமைப்புகள் மற்றும் தனி நபர்களால் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. சில நாட்கள் பூஜைக்குப் பின்னர் இவை முக்கிய சாலைகளின் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும். இருப்பினும், விநாயகர் சிலைகளின் ஊர்வலத்தில் சில நேரங்களில் எதிர்பாராத விதமாக வன்முறை சம்பவங்களும் நடைபெறும்.

இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் ஏற்படுவதை பல்வேறு மாவட்டங்களும் உரிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் போடப்பட்டு உள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு நாளைய தினம் மொத்தம் 976 சிலைகள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. இதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வேலூர் எஸ்.பி ராஜேஷ்கண்ணன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும்  கூறுகையில், “வேலூர் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள 976 விநாயகர் சிலைகள் நாளை ஊர்வலமாகச் சென்று கரைக்கப்பட உள்ளது. இதில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஊர்வலத்தில் பிரச்சனை செய்பவர்கள் மீது, அது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் 1500 காவலர்கள், 221 பயிற்சி காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 45 இடங்களில் 170 சிசிடிவி கேமிரா, 4 டிரோன்கள், 10 வீடியோ கேமரா மூலம் விநாயகர் சிலை ஊர்வலம் கண்காணிக்கப்பட உள்ளது. அதேபோல வேலூர் நகரத்தில் உள்ள அனைத்து விநாயகர் சிலைகளும் ஜி.பிஸ்.எஸ் மூலம், கூகுள் மேப் டிராகிங் மூலமாகவும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே குற்றச் செயல்களில் ஈடுபட்ட 60 நபர்களையும் கைது செய்து உள்ளோம். சிலைகள் கரைக்கப்படும் சதுப்பேரி ஏரியில் முழு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரச்சினை செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.